பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கன் தலிபான்களும் எல்லையில் புதன்கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான எதிர்த்தரப்பு படையினரைக் கொன்றதாக இரு தரப்பினருமே கூறினர்.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் மீது ஆப்கன் தலிபான் படையினர் புதன்கிழமை நடத்திய தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
ஸ்பின் போல்டக் எல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 15 முதல் 20 வரையிலான ஆப்கன் தலிபான் படையினர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
இது தவிர, பிற எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்திய சுமார் 25 முதல் 30 வரையிலான தலிபான் படையினர் எதிர்த் தாக்குதலில் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்தான் தாக்குதல் நடத்தியது எனவும், இதில் 12 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோதலில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தலிபான் அரசு கூறியது.
இருந்தாலும், இரு தரப்பிலும் கூறப்படும் உயிரிழப்பு விவரங்களை நடுநிலை ஊடகங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்திவரும் தலிபான் அமைப்பினர் தங்கள் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிவருகிறது. தலிபான் அரசும் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்துவதாகக் கூறிவருகிறது.
கடந்த வாரம் கூட ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று தலிபான் குற்றஞ்சாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, இரு தரப்பினரும் எல்லையில் கடந்த வார இறுதியில் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். இதில் 58 பாகிஸ்தான் வீரர்களை கொன்றதாக தலிபானும், 200 தலிபான் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பயங்கரவாதிகளைக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவமும் தெரிவித்தன.
இந்த நிலையில், இரு தரப்பினரும் மீண்டும் எல்லை மோதலில் ஈடுபட்டு, எதிர்த் தரப்பினருக்கு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதாக தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 மணி நேர போர் நிறுத்தம்
ஆப்கன் தலிபான்களுடன் 48 மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்வதாக பாகிஸ்தான் புதன்கிழமை அறிவித்தது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எல்லையில் தற்காலிக போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசும் முடிவு செய்துள்ளன. புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி 48 மணி நேரத்துக்கு இந்தப் போர் நிறுத்தம் நீடிக்கும். தலிபானிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.