பாகிஸ்தானிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்(பிஐஏ)-இன் பிரிட்டனுக்கான விமான சேவை சனிக்கிழமை(அக். 25) தொடங்கியது.
முன்னதாக, கடந்த 2020-இல், பாகிஸ்தானின் கராச்சியில் பிஐஏ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த விசாரணையில், பாகிஸ்தானில் பெரும்பாலான விமானிகள் போலி ‘விமானி உரிமம்’ பெற்றிருப்பதை அப்போதைய விமானத்துறை அமைச்சரான குலாம் சர்வார் கான் அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, ‘ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை(இஏஎஸ்ஏ)’ மற்றும் பிரிட்டன் சிவில் விமான நிர்வாகம் ஆகியவை பிஐஏ விமானங்களுக்கு பிரிட்டனில் தடை விதித்தது. பிரிட்டனில் சுமார் 16 லட்சம் பாகிஸ்தானியர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விமான சேவை நிறுத்தப்பட்டதால் இந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் தொடர் முயற்சியால், அந்தத் தடை கடந்தாண்டு நவம்பரில் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலையில் பிரிட்டன் முக்கிய அறிப்பையும் வெளியிட்டது.
பிரிட்டனின் வான் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பாகிஸ்தானை அதிலிருந்து நீக்கி பிரிட்டன் அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசின் பிஐஏ, பிரிட்டனுக்கு விமானங்களை இயக்க விண்ணப்பித்து அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலைக்குப் பின், முதன்முதலாக பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்கான நேரடி விமானம் இன்று(அக். 25) இஸ்லாமாபாத்திலிருந்து மான்செஸ்டருக்கு 284 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.