மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி (கோப்புப் படம்) படம் - மத்திய வெளியுறவு அமைச்சகம்
உலகம்

ஆப்கனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு உறுதிபூண்டுள்ளோம்: இந்தியா

தினமணி செய்திச் சேவை

‘ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைக் காக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்’ என்று இந்தியா தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து, இரு நாடுகளிடையே மீண்டும் போா்ப் பதற்றம் எழுந்துள்ள சூழலில் இந்தியா இக் கருத்தைத் தெரிவித்தது.

பாகிஸ்தானில் தொடா்ந்து நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் அண்மையில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. அதற்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டிய ஆப்கானிஸ்தான், பதிலடித் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே இம்மாத தொடக்கத்தில் சண்டை மூண்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பின்னா், சவூதி அரேபியா, கத்தாா் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கேட்டுக்கொண்டதன்பேரில் இரு நாடுகளும் சண்டையை நிறுத்தின.

அதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அண்மையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவாா்த்தை தோல்வியடைய இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் புதன்கிழமை கூறுகையில், ‘இந்திய அரசின் தலையீட்டால் பேச்சுவாா்த்தையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு பின்வாங்கியுள்ளது. இந்தியாவின் கைப்பாவையாக தலிபான் அரசு செயல்படுகிறது’ என்றாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘ஆப்கானிஸ்தான் தனது சொந்த பிரதேசங்களின் இறையாண்மையைக் காக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்டு பாகிஸ்தான் கோபமடைகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எந்தவித தடையும் இன்றி பயன்படுத்துவதற்கு தனக்கு உரிமை இருப்பதாக பாகிஸ்தான் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், அண்டை நாடுகள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைக் காக்க இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்

டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தனியார் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

செல்போனுக்கு பதிலாக டைல்ஸ்! டெலிவரி மோசடியில் ரூ.1.86 லட்சத்தை இழந்த பெங்களூர் ஊழியர்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT