நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம் உறுதி செய்திருக்கிறது.
திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம், செவ்வாயன்று கலவரமாக வெடித்து, நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் படைதிரண்ட நிலையில், அந்நாட்டு அதிபரும் பதவியை ராஜிநாமா செய்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் ராஜிநாமா செய்யவில்லை என்று நேபாள ராணுவம் தெரிவித்திருக்கிறது.
அதேவேளையில், நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் வகையில், அதிபா் ராமச்சந்திர பெளடேல், அனைத்துத் தரப்பினரும் அமைதி காத்து நேபாளத்துக்கு மேலும் தீங்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும். அனைவரும் பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இரண்டு நாள்களாக கலவர பூமியாக மாறியிருந்த நேபாளத்தில் இன்று அமைதி திரும்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 போ் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கப்பட்டும் செவ்வாயன்றும் போராட்டம் தொடர்ந்தது. இதில் மேலும் மூன்று பேர் பலியாகினர்.
நேற்று இளைஞா்களின் வன்முறைப் போராட்டத்தில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதால் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது.
பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகா் காத்மாண்டு மற்றும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராடினர். பல இடங்களில் காவல்துறையினருக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
காத்மாண்டில் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, அங்குள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் தீ வைத்து எரித்தனா். இதேபோல அங்குள்ள உச்சநீதிமன்றத்துக்கும் தீவைத்தனா்.
நேபாள தலைநகர் காத்மாண்டில் அதிபா் அலுவலகம், பால்கோட் பகுதியில் உள்ள கே.பி.சா்மா ஓலி வீடு ஆகியவற்றுக்கும் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக கே.பி.சா்மா ஓலி அறிவித்தாா்.
அதனைத் தொடர்ந்து அதிபரும் பதவியை ராஜிநாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை நேபாள ராணுவம் மறுத்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.