வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மற்றும் மிரண்டா, அராகுவா, லா குவயிரா ஆகிய மாநிலங்களின் மக்கள் குடியிருப்புகள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளின் மீது, சனிக்கிழமை (ஜன. 3) காலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காதான் காரணம் என வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெனிசுவேலா மீதான வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதும் அங்குள்ள கட்டமைப்புகளில் தீப்பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உள்ளூர்வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, போதைப் பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இத்துடன், வெனிசுவேலா மீதான தாக்குதல்கள் அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் கீழ் நடைபெற்றதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அமெரிக்க அரசு எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.