சௌதி அரேபியாவில் மிக வயதான நபர் என்று அறியப்பட்டு வந்த ஷேக் நாசர் பின் ராடன் அல் ரஷீத் அல் வாடா, தன்னுடைய 142-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.
சௌதி அரேபியாவின் வரலாற்றில் புதிய நாடாக உருவானது முதல், அதன் அனைத்து ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் இவர் வாழ்ந்திருக்கிறார் என்பது இவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதாவது, சௌதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துலாஸிஸ் முதல், தற்போதைய மன்னர் சல்மான் வரை அனைவரின் ஆட்சியையும் இவர் பார்த்துள்ளார். இவரது வாழ்க்கை, வெறும் நீண்ட ஆயுளுக்கான உதாரணமாக மட்டுமல்லாமல், பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றுக்கும் முன்னுதாரனமாக மாறியிருக்கிறது.
வெறும் பாலைவனமாக இருந்த சௌதி அரேபியா, தற்போது நவீன நகரமாக மாறியிருப்பதை இவர் நேரடியாக தன்னுடைய கண்களால் கண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இவர் தன்னுடைய 142வது வயதில் காலமானார். இவரது பிறப்பு தேதி துல்லியமாக இருப்பின், இவர் 1800-ஆவது ஆண்டுகளில் பிறந்திருக்க வேண்டும். அப்போது சௌதி அரேபியா என்றொரு நாடே இருந்திருக்காது.
இவர் 40 முறை ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு தற்போது 134 பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். இவர் கடைசியாக தன்னுடைய 110வது வயதில் திருமணம் செய்து ஒரு மகளும் பிறந்தார்.
இவரது இறுதிச் சடங்கில், அந்நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சுமார் 7000 பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.