இஸ்ரேலின் தாக்குதல்களில், ஒரே நாளில் 3 பத்திரிகையாளர்கள், 2 சிறுவர்கள் உள்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவின் புரைஜ் அகதிகள் முகாம், ஸாஹ்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜன. 21) ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதில், கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கூறுகையில், காலையில் அவர் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளது அனைவரையும் கலங்கச் செய்கின்றது.
மத்திய நகரமான ஸாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், பத்திரிகையாளர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.
இதேபோல், முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, இஸ்ரேல் அரசு கூறுகையில், மத்திய காஸா பகுதியில், தங்களது படைகளை அச்சுறுத்தும் வகையில் ட்ரோனை இயக்கிய நபர்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக். 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.