இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர்: இருதரப்புக்கும் ஐ.நா. கண்டனம்!
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம்
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் பேசுகையில், "ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு சாத்தியக் கூறுகளும் இல்லை.
இந்தத் தாக்குதலால், வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டு விட்டது.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.
சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், அணுசக்தி பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஐநா அவைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் ஐராவனி பேசுகையில், "அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு போர்க் குற்றத்தைச் செய்துள்ளன. அப்பாவி பொதுமக்களின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டுமல்ல; இது ஒரு போர்க் குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஐநா அவைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனன் பேசுகையில், "ஈரானின் அச்சுறுத்தலைத் தடுக்கவே இஸ்ரேலும் அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்தன. நாங்கள் எந்த உள்நோக்கமும் ஆக்கிரமிப்பு காரணங்களாலும் செயல்படவில்லை.
அச்சுறுத்தல் இருக்கும் வரையில் கூட்டு முயற்சி தொடரும்" என்று தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் பேசுகையில், "ஈரானுடனான இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், அனைத்து வாய்ப்புகளையும் ஈரான் பயன்படுத்த தவறிவிட்டது" என்று தெரிவித்தார்.
ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் கடுமையாக வலியுறுத்துகிறேன்; சர்வதேச சட்டத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், அணுசக்தி பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்துவதைத் தடுக்கவும், பிராந்தியத்தை விளிம்பிலிருந்து பின்வாங்கவும் வலியுறுத்துகிறேன்.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இந்தப் போருக்கு இரு தரப்பையும் ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.