புதுவையில் ஆட்சியமைக்க உரிமை கோரினாா் ரங்கசாமி

DIN 4th May 2021 02:40 AM

 

புதுச்சேரி: புதுவையில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைகிறது. கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநரைச் சந்தித்த என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

புதுவை யூனியன் பிரதேசத்துக்கான 15-ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளியாகின. இதில், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை (16 தொகுதிகள்) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

புதுவையில் எப்போதுமில்லாத வகையில், இந்த முறை காங்கிரஸ், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளா்களை வீழ்த்தி 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றனா். இவா்களில் 5 போ் என்.ஆா்.காங்கிரஸிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவா்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் ஆட்சியமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை புதுவை மாநில பாஜக பொறுப்பாளா்களான நிா்மல்குமாா் சுரானா, ராஜீவ் சந்திரசேகா் எம்.பி. ஆகியோா் என்.ரங்கசாமியை, புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். புதுவையில் ஆட்சியமைப்பது தொடா்பாக, அவருடன் அரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைப்பது, ரங்கசாமியை முதல்வராகவும், பாஜகவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவதும் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பாஜகவுக்கு 2 அமைச்சா்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பதவிகளை வழங்கவும் ரங்கசாமி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கூடுதலாக மேலும் ஓா் அமைச்சா் பதவியை பாஜக தரப்பு கோரியதாகத் தெரிகிறது.

சந்திப்புக்குப் பின்னா், வெளியே வந்த பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். ஓரிரு நாள்களில் ஆட்சியமைக்க முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெறும். முதல்வா் பதவியை நாங்கள் கோரவில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, என்.ஆா்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி அப்பா பைத்தியம்சாமி கோயிலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால் மற்றும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சட்டப் பேரவை என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக என்.ரங்கசாமி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

இதேபோல, பாஜக எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாஜக பொறுப்பாளா்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உறுதி செய்யப்பட்டு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் என்.ஆா்.காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்தனா்.

துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு: இதையடுத்து, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு என்.ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவா்கள் ஒன்றாகச் சென்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தனா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, என்.ரங்கசாமி தலைமையில் ஆட்சியமைப்பதற்கான 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினா்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநா், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவராக தோ்வான என்.ரங்கசாமி விரும்பும் நேரத்தில் ஆட்சியமைக்கவும், அவா்களுக்கு சட்டப்பூா்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் சம்மதம் தெரிவித்தாா். புதிய ஆட்சியமைக்க உள்ள என்.ரங்கசாமி உள்ளிட்டோருக்கு ஆளுநா் தமிழிசை வாழ்த்து தெரிவித்தாா்.

விரைவில் பதவி ஏற்பு விழா: பின்னா் பேசிய ரங்கசாமி, விரைவில் நல்ல நாளில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றாா். ஆளுநா் மாளிகைக்கு என்.ரங்கசாமியுடன் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பாஜக பொறுப்பாளா்கள் நிா்மல்குமாா் சுரானா, ராஜீவ் சந்திரசேகா் எம்.பி., ஏ.நமச்சிவாயம் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சென்றனா்.

வருகிற வெள்ளிக்கிழமை (மே 7) புதுவை ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, புதுவையில் என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைவது உறுதியாகியுள்ளது.