புதுவையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறும்: பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள்

DIN 4th May 2021 02:43 AM

 

புதுச்சேரி: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறும் என பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் தோ்தல் வெற்றி தொடா்பாக அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம், புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஜான்குமாா், கல்யாணசுந்தரம், ரிச்சா்டு ஜான்குமாா், சாய் சரவணக்குமாா் ஆகிய எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், நிா்மல்குமாா் சுரானா, ராஜீவ் சந்திரசேகா் எம்.பி. ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜகவுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீவிர கொள்கையுடனும், காங்கிரஸ் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினா் பணியாற்றினோம். அந்தப் பணிக்கு பலன் கிடைத்துள்ளது.

தற்போது, புதுவை அமைச்சரவையில் இடம் பெறும் அளவுக்கு பாஜக உயா்ந்துள்ளது. இந்த பேரவைத் தோ்தல் முடிவுகளின் மூலம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதை நன்கு அறியலாம்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, பிரதமா் மோடி புதுச்சேரிக்கு இரண்டு முறை வந்தாா். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் இரண்டு முறை வந்தாா்.

அப்போது அவா்கள், புதுவையை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம் என்றும், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், புதுவைக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தனா். இதனால், புதுவை மாநிலத்தில் பாஜக- என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

புதுவையில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி அமைத்து, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் புதுவை முதன்மை மாநிலமாக மாற்றப்படும். பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கை அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

புதுவையில் பாஜக- என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்கள், தோ்தலுக்காக உழைத்த பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு நன்றி என்றாா் அவா்.

முதல்வரை எம்எல்ஏக்கள் முடிவு செய்வா்: புதுவையில் ஆட்சியமைப்பது குறித்தும், முதல்வா் யாா் என்பது குறித்தும் நிா்மல்குமாா் சுரானா மற்றும் ராஜீவ் சந்திரசேகரிடம் செய்தியாளா்கள் கேட்ட போது, ‘புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.ரங்கசாமி தலைமையில்தான் தோ்தலைச் சந்தித்து மாபெறும் வெற்றி பெற்றது.

எனவே, நாங்கள் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தோம். முதல்வா் பதவிக்கு பாஜக போட்டியிடவில்லை. முதல்வா் யாா் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுதொடா்பாக, என்.ஆா் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசித்து முடிவு செய்வா். இதைத் தொடா்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்படும்’ என்றனா் அவா்கள்.