சித்தராமையா அரசு கோமா நிலையில் உள்ளது
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கோமா நிலையில் உள்ளது என பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கோமா நிலையில் உள்ளது என பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மைசூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் நடந்த விவசாயிகள் ஊக்குவிப்பு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: கர்நாடகத்தில் மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கோமா நிலையில் உள்ளதால், எவ்வித வளர்ச்சிப் பணிகளும் கர்நாடகத்தில் நடக்கவில்லை.
இந்த ஆட்சியை கோமா நிலையில் இருந்து மீட்க சோனியாகாந்தி, ராகுல்காந்தியால் கூட முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை நீடித்தவண்ணம் உள்ளது.
Advertisement
Advertisement
மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவும், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாத அவல நிலையில் கர்நாடக அரசு உள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னலை யாரிடம் பகிர்ந்துக் கொள்வது என்பது புரியாமல் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னையில் இருந்து விடுபட, பயிர்க் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் வறட்சி பிரச்னை குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிய முதல்வர் சித்தராமையா எங்காவது சென்றதுண்டா?
பெங்களூரு மாநகராட்சியை கொல்லைப்புறமாக கைப்பற்றியதை முதல்வர் சித்தராமையா பெரும் சாதனையாக கருதுவது வேடிக்கையானது. பெங்களூருவை மட்டுமல்ல, அவரது சொந்த ஊரான மைசூரையும் முதல்வர் சித்தராமையா மேம்படுத்தவில்லை.
இந்த அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றார்.
இக் கூட்டத்தில், மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகெளடா, கட்சியின் மாநிலத் தலைவர் பிரஹலாத்ஜோஷி, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, எம்பி ஷோபாகரந்தலஜே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமித்ஷா வரவில்லை
மைசூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விவசாயிகள் ஊக்குவிப்பு மாநாட்டில் பங்கேற்க, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருவதாக இருந்தது. அவரின் வருகைக்காக ஏற்பாடுகளும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால், பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டியிருந்ததால், கடைசி நிமிடத்தில் அமித்ஷா வருகை ரத்துசெய்யப்பட்டது.
ஏற்கெனவே, பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமைத் தொடக்கி வைக்க அமித்ஷா மைசூரு வருவதாக இருந்து, கடைசியில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.