கட்டுரைத் தமிழ் வளர்த்த காந்தி: ஏ.என்.சிவராமனுக்கு புகழாரம்
கட்டுரைத் தமிழ் வளர்த்த காந்தியாக தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் திகழ்ந்தார் என்று முனைவர் வ.வே.சுப்பிரமணியன் பேசினார்.
கட்டுரைத் தமிழ் வளர்த்த காந்தியாக தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் திகழ்ந்தார் என்று முனைவர் வ.வே.சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் "தமிழ் வளர்த்த சான்றோர்' என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் "கட்டுரைத் தமிழ் வளர்த்த காந்தி' என்ற தலைப்பில் ஏ.என்.சிவராமன் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் வ.வே.சுப்பிரமணியன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
அப்போது வ.வே. சுப்பிரமணியன் பேசியதாவது: 50 வயதுக்கு மேல் உள்ள 90 சதவீத தமிழர்களுக்கு ஏ.என்.சிவராமன் குறித்து தெரியும். உரைநடை பாணி கட்டுரைக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்தவர் அவர். அவர் கட்டுரைத் தமிழ் வளர்த்த காந்தி.
ஆசிரியர் என்றால் குற்றம் நீக்குபவர். ஆசிரியராக இருக்கும் அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருந்தது. மேலும், பத்திரிகை தர்மத்தை தாண்டிய சமூகப் பொறுப்பும் அவருக்கு இருந்தது.
ஒரு வரி கூட தவறாகவோ கவனம் இல்லாமலோ எழுதியது இல்லை. வாசகர்களே முக்கியம் என்று நினைத்தவர். பொதுமக்களின் அறிவு வளர கட்டுரையை எளிமையாக்கி வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர் அவர் என்றார் வ.வே.சுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் பேசிய கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், வாசகர்களிடம் எந்த இடத்திலும் பொய் சொல்லாமல் எழுதியவர் ஏ.என்.சிவராமன் என்றார்.
தொடர் நிகழ்ச்சியின் அடுத்த பகுதியாக வரும் அக்.1-ஆம் தேதி தொ.மு. பாஸ்கர தொண்டைமான் குறித்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.