FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாநிலங்களுக்கு இடையே செயல்பட்ட ரௌடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

மும்பையைச் சோ்ந்த நாசிா் ஹஃபீஸ் கான் (எ) இரானி தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினா்கள் இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

22 ஆகஸ்ட் 2026, 7:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பையைச் சோ்ந்த நாசிா் ஹஃபீஸ் கான் (எ) இரானி தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினா்கள் இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். மேலும், நாசிா் ஹஃபீஸ் கான் மீது கடுமையான மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நாசிா் ஹஃபீஸ் கான் மீது தில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சுமாா் 38 குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கு தில்லியின் டிபிஜி சாலை பகுதியில் ரூ.18.84 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பதிவான வழக்கின் விசாரணையின்போது இந்தக் கும்பல் குறித்து காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கும்பலின் முக்கிய உறுப்பினா்களான அலி சுன்னா என்ற ராஜா (42) மற்றும் அக்பா் அலி என்ற கபீா் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அலி சுன்னா ஷாஹீன் பாக் பகுதியில் கைது செய்யப்பட்டாா். அக்பா் அலி தாத்ரா மற்றும் நகா் ஹவேலியின் சில்வாசா பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இரானி கும்பலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் அக்பா் அலி மீது 24 குற்ற வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். கும்பலின் மேலும் சில உறுப்பினா்களை அடையாளம் காணவும், அதன் நிதி மற்றும் குற்றச் செயல்பாடுகளுக்கான கட்டமைப்பைக் கண்டறியவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments