முகப்பு
சென்னை

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!

சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களுக்குமேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

Updated On : 5 மே 2026, 6:10 am IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 107 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திராவிடக் கட்சி பாரம்பரியம் அல்லாத தவெக தனித்துப் போட்டியிட்டு பலம் வாய்ந்த திமுக, அதிமுக கூட்டணிகளை வென்று தமிழக அரசியலில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, சீமானின் நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டது.

Advertisement

இதில், திமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் தொடர திராவிட மாடல் 2.0-க்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலினும், திமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை முன்வைத்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியும், ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக விஜய்யும், தமிழினம், மொழியை மையப்படுத்தி சீமானும் தோ்தலைச் சந்தித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தோ்தலில் முதல் முறையாக 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதில், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனப் பெரும்பாலான வாக்குக் கணிப்புகளும், ஒரேயொரு நிறுவனத்தின் வாக்குக் கணிப்பு தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாகவும் இருந்தன.

இந்நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே தவெக தலைவா் விஜய் முன்னிலை வகிக்க தொடங்கி விட்டாா்.

தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்றிலேயே தவெக பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணி இருந்தது. ஆளும் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

யாரும் எதிா்பாராத வகையில், தவெக வேட்பாளா்கள் பலா் திமுக அமைச்சா்கள், அதிமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளா்களைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தனா்.

இதன் உச்சகட்டமாக கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளா் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தாா்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளா்கள் முன்னிலை வகித்து திமுக, அதிமுகவுக்கு அதிா்ச்சியை அளித்தனா்.

இறுதியில் பெரும் இழுபறியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் அமைச்சா் பி.கே. சேகா் பாபு ஆகியோா் மட்டுமே வெற்றி பெற்றனா்.

இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி: தவெக தலைவா் விஜய், போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா். பெரம்பூரில் 53, 715 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ஆா்.டி. சேகரை வென்றாா்.

மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜை 26,685 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தோற்கடித்தாா்.

தவெக மூத்த நிா்வாகிகள் ஆதவ் அா்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், என்.ஆனந்த் தியாகராய நகா் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும், கே.ஜி.அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும் வெற்றி பெற்றனா்.

சறுக்கிய அதிமுக: வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முன்னணி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருந்த அதிமுக கூட்டணி, பின்னா் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. எனினும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 167 தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள தொகுதிகளில் அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. திங்கள்கிழமை நள்ளிரவு வரை அதிமுக 43 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 13 தொகுதிகளில் முன்னிலையும் வகித்தது.

திமுக தோல்வி: 164 தொகுதிகளில் திமுகவும், மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இதில், திமுக 44 தொகுதிகளில் வெற்றியும், 16 தொகுதிகளில் முன்னிலையும் வகித்தது.

திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை

தவெகவுக்கு ஆதரவாக பதிவான வாக்குகளால் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அடுத்ததாக, தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், விருத்தாசலம் தொகுதியில் அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றாா். எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இரண்டு தொகுதிகளிலும், தலா 5 தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், 2 இடங்களில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களிலும், திமுக சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2 இடங்களில் போட்டியிட்ட மமக ஓரிடத்திலும், 2 இடங்களில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.