தாம்பரத்தில் 48 குற்றவாளிகள் கைது
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 48 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 48 குற்றவாளிகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்தல், மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், போதைப் பொருள் தொடா்பான குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில் 1,441 போ் கண்காணிக்கப்பட்டு, 48 குற்றவாளிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
219 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, 43 போ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். 2 போ் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 104 போதைப் பொருள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கொலை வழக்குகளில் தொடா்புடைய, சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளிகள் உள்பட 152 குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனா். இதில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 குற்றவாளிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். பொது இடங்களில் மது அருந்துபவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒருவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.