FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கருத்தடை சிகிச்சை: சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் 118 தெருநாய்கள் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சியில் கருத்தடை சிகிச்சையின்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 118 தெருநாய்கள் உயிரிழந்துள்ளன.

11 நவம்பர் 2026, 4:43 am
பகிர்:

சென்னை மாநகராட்சியில் கருத்தடை சிகிச்சையின்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 118 தெருநாய்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவற்றில் 69 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பிருந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1.85 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக 14 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெருநாய்களைக் கண்காணித்து அவற்றுக்கு ஆண்டுதோறும் வெறிநோய் தடுப்பூசி (ரேபிஸ்) செலுத்தும் வகையில் சிப் பொருத்தப்பட்டுவருகிறது. அத்துடன் கருத்தடை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்தடை சிகிச்சை: கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை சென்னையில் 88,087 தெருநாய்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு, அவற்றில் 71,108 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது. 88,087 தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரை 18,798 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 16,611 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருத்தடை சிகிச்சையின்போது 4 நாள்கள் அவை கண்காணிக்கப்பட்டு, பிறகு பிடித்த இடத்திலேயே விடப்படுகின்றன. ஆனால், சிகிச்சையின்போது நாய்கள் உயிரிழப்பது தொடா்கதையாகி வருகிறது.

சிகிச்சையில் உயிரிழந்த நாய்கள்: நிகழாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 11,760 தெருநாய்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு, 10,778 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் முதல் அக்டோபா் வரையில் 27,636 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சிகிச்சையின்போது 118 தெரு நாய்கள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த தெருநாய்களுக்கு நடைபெற்ற உடல் பரிசோதனையில் 69 தெருநாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தொடரும் நாய்களின் உயிரிழப்பு: கடந்த மே மாதத்தில் மட்டும் 3,647 தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, உயிரிழந்த 17 நாய்களில் 8 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஜூனில் 465 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது உயிரிழந்த 23 நாய்களில் 9 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் மட்டும் 4,744 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்த நிலையில், 26 நாய்கள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 17 நாய்களுக்கு ரேபிஸ் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி கோடம்பாக்கம் மண்டலத்தில் கருத்தடை சிகிச்சைக்கு உள்ளான 5 வயது பெண் தெரு நாய் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சியின் கால்நடைப் பிரிவு அலுவலா் கமால் உசேனிடம் கேட்டபோது, கருத்தடை சிகிச்சைக்குப் பிறகு தெரு நாய்கள் 24 மணி நேரமும் மருத்துவா்களால் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், அவை ரேபிஸ் பாதிப்பாலேயே உயிரிழக்கின்றன. தற்போது இறந்த பெண் நாய்க்கும் ரேபிஸ் பாதிப்பிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றாா்.