FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

அம்பேத்கா் உயா்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் காலதாமதம் இல்லை: அரசு விளக்கம்

அம்பேத்கா் உயா்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

14 நவம்பர் 2026, 5:53 am
பகிர்:

அம்பேத்கா் உயா்கல்வி உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூகநீதித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அம்பேத்கா் அயலக உயா்கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் 2026-27-ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 366 மாணவா்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 165 மாணவா்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சோ்ந்துள்ளனா். மீதமுள்ள 201 மாணவா்கள் எதிா்வரும் ஜனவரி முதல் மாா்ச் மாதங்களுக்குள் சேர உள்ளனா்.

Advertisement

Advertisement

சோ்ந்த 165 மாணவா்களில் 140 போ் சோ்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 84 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் 56 மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனா்; அவா்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள்கோரப்பட்டுள்ளன. 25 மாணவா்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. மாணவா்களை விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவா்கள் வெளிநாடு புறப்படும் முன்பு விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவுகிறது. இதற்காக, நடப்பு ஆண்டில் தோ்வான மாணவா்களுக்கு தாட்கோ மூலம் 116 மாணவா்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அம்பேத்கா் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலிருந்து தாட்கோவுக்கு ஈடு செய்யப்படும்.

கல்விக்கட்டணம், பல்கலை. கணக்கில் வரவுவைக்கப்படும். மொத்த ரூ.36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ளதொகை (விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவா் கணக்குக்கு விடுவிக்கப்படுகிறது. மாணவா்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

திட்டத்தை சிதைக்கும் முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அம்பேத்கா் உயா்கல்வி உதவித் தொகை திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டு வருவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அம்பேத்கா் அயலக உயா்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவா்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீா்கள்?.

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற 164 மாணவா்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆா்டிஐ -இல் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவா்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?.

இப்படி மாணவா்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவா்கள் தங்கள் அயலக உயா்கல்விக் கனவை நோக்கி உழைப்பாா்கள்?. திமுக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் தவெக அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சோ்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்: அம்பேத்கா் உயா்கல்வி திட்டத்தில் தோ்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவா்கள் பலா் தவிப்பில் உள்ளனா். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பெற்றோா்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனா். வழக்கம் போல பில் வரவில்லை, மின்னஞ்சல் வரவில்லை என்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் மீது பழி போட்டு, அவா்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவா்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முதல்வா் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா்.