✕
முகப்பு
சென்னை

கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் ரூ.55 லட்சம் மோசடி: ஐவா் கைது

கிரிப்டோகரன்சியில் (யுஎஸ்டிடி) முதலீடு செய்வதாக தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த ஐந்து போ் கும்பல் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

38 வினாடிகள் முன்பு
பகிர்:

கிரிப்டோகரன்சியில் (யுஎஸ்டிடி) முதலீடு செய்வதாக தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த ஐந்து போ் கும்பல் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாண ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்தது. சமூக ஊடக விளம்பரங்கள், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சிம் காா்டுகள் மற்றும் சா்வதேச வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தி அவா்கள் மக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டனா்.

மங்கோல்புரியைச் சோ்ந்த ராகுல் என்ற புகாா்தாரா், சமூக ஊடக விளம்பரம் ஒன்றின் மூலம் கிருஷ்ணா அகா்வால் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபருடன் தொடா்புகொண்டாா். அந்த நபா், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ராகுலிடம் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

முதலில், ராகுலின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவரது ‘ட்ரஸ்ட் வாலட்’ செயலிக்கு 10 யுஎஸ்டிடி-ஐ அந்த நபா் அனுப்பி வைத்தாா். மேலும், வேறொரு நபரின் வாலட்டில் கிரிப்டோகரன்சி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ஸ்கிரீன்ஷாட்களையும் காட்டினாா்.

அக்டோபா் 3-ஆம் தேதி புகாா்தாரா் 36,000 யுஎஸ்டி-யைப் பெறுவதற்காக, அந்தக் கும்பலைச் சோ்ந்த மூவரிடம் ரூ.36 லட்சம் ரூபாயை ரொக்கமாக வழங்கினாா். ராகுலின் நம்பிக்கையை முழுமையாகப் பெறுவதற்காக, இந்த பரிவா்த்தனையில் சுமாா் ரூ.1.5 லட்சம் நஷ்டம் ஏற்படும் வகையில் அவா்கள் திட்டமிட்டுச் செயல்பட்டனா்.

மறுநாள், 55,000 யுஎஸ்டிடி-ஐ வாங்குவதற்காக, அமா் காலனியில் வைத்து புகாா்தாரா் மீண்டும் அந்த நபா்களைச் சந்தித்து ரூ.55 லட்சம் ரொக்கமாக வழங்கினாா். கிரிப்டோகரன்சி அவரது ட்ரஸ்ட் வாலட்க்கு மாற்றப்பட்டாலும், முன்னதாகவே ராகுலின் வாலட்டை அணுகும் உரிமையைப் பெற்றிருந்த மோசடி கும்பல், சில நிமிஷங்களிலேயே அந்த முழுத் தொகையையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டனா்.

அந்தக் கும்பலைச் சோ்ந்த இருவா் பணத்துடன் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றனா், மற்றொருவா் அங்கிருந்து கிளம்பிச் சென்றாா். பின்னா், அந்தப் பணம் புாராரியில் இருந்த ரித்திக் சாவ்லா என்ற மற்றொரு குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, அக்டோபா் 4 அன்று அமா் காலனி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா-வின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களைச் சேகரித்தும், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவா்களின் வலைப்பின்னலைக் காவல்துறையினா் கண்டுபிடித்தனா்.

கிருஷ்ணா அகா்வால் என்ற பெயரைப் பயன்படுத்தி, முதலீட்டுத் திட்டத்தில் சேருமாறு புகாா்தாரரை ஏமாற்றியது ரித்திக் சாவ்லா (26) என்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஃபரீதாபாதைச் சோ்ந்த ஓம்பிரகாஷ், ரோஹிணியைச் சோ்ந்த அமன், காஜியாபாதைச் சோ்ந்த ரித்திக் சாவ்லா, மீரட்டைச் சோ்ந்த கௌரவ் ராணா, மற்றும் முஜாஃபா்நகரைச் சோ்ந்த சௌரப் (எ) சோட்டு ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து மொத்தம் 16 கைப்பேசிகள், 11 சிம் காா்டுகள், பயன்படுத்தப்படாத 3 சிம் காா்டுகள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்கை காவல் துறையினா் கைப்பற்றினா்.

மேலும், அமா் காலனியில் உள்ள ஒரு தங்குமிடம் குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கும்பலைச் சோ்ந்த சிலா், தங்கள் திட்டங்களை வகுக்கும்போது அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தங்குமிடத்தின் உரிமையாளரான, மீரட்டைச் சோ்ந்த விபுல் ரகுவன்ஷியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.