முகப்பு

வர்த்தக, தொழில் சம்மேளனம் - ஜப்பான் குழு சந்திப்பு

இந்திய-ஜப்பான் வணிகத் தொடர்புகளை மேலும் உறுதியான வாய்ப்புகளுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக சென்னையிலுள்ள இந்தோ-ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனமும் (ஐஜெசிசிஐ), ஜப்பானின் ஒசாகா வர்த்தக மற்றும் தொழில் சபை (ஒசிசிஐ) குழுவினரும் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

21 நவம்பர் 2026, 2:58 am
வர்த்தக, தொழில் சம்மேளனம் - ஜப்பான் குழு சந்திப்பு
பகிர்:

இந்திய-ஜப்பான் வணிகத் தொடர்புகளை மேலும் உறுதியான வாய்ப்புகளுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக சென்னையிலுள்ள இந்தோ-ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனமும் (ஐஜெசிசிஐ), ஜப்பானின் ஒசாகா வர்த்தக மற்றும் தொழில் சபை (ஒசிசிஐ) குழுவினரும் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

ஐஜெசிசிஐ மற்றும் ஜப்பானின் ஒசாகாவின் ஒசிசிஐ-இன் 16 பேர் கொண்ட தூதுக் குழுவின் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜப்பானிய தூதுக் குழுவுக்கு ஒசாகா வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் சர்வதேச வணிகக் குழுவின் தலைவர் ஹிரோமிட்சு மோரிஷிமா மற்றும் ஜப்பான் அரசின் ஒசாகா, வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (ஜெட்ரோ) இயக்குநர்-ஜெனரல் யாசுஷி நினோமியா ஆகியோர் தலைமை வகித்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஐஜெசிசிஐ தலைவர் எஸ். பத்மநாபன் கூறியதாவது: ஜப்பான் குழுவின் வருகை, இந்தியா -ஜப்பான் இடையிலான பொருளாதார உறவின் முக்கியத்துவத்தையும், இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதன் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது.

கடந்த 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ஐஜெசிசிஐ, ஜப்பான் அரசின் பொருளாதார, வர்த்தக தொழில் துறை அமைச்சகம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைப்பு போன்ற ஜப்பானிய அமைப்புகளுடன் இணைந்து, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கிடையான (எஸ்எம்இ) ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.

உலகளாவிய திறன் மையங்களுக்கான ஓர் இடமாக இந்தியாவின் வளர்ந்துவரும் வாய்ப்புகள், மத்திய பட்ஜெட், தொழிலாளர் சட்ட மேம்பாடுகள் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து நேரடியாகவும், இணையவழியாகவும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஜப்பானிய மொழிக் கல்வியையும் ஐஜெசிசிஐ ஊக்குவித்து வருகிறது.

2027-இல் இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டு (பவள) விழா வணிக, கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட வேண்டும் என இரு தரப்பும் விரும்புகின்றன.

ஜப்பானுடனான உறவை உறுதியான வணிக வாய்ப்புகளாக மாற்றுவதை ஐஜெசிசிஐ விரும்புகிறது. இந்தியாவின் விரிவடைந்துவரும் பொருளாதாரத்தில், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

டிசம்பர் முதல் வாரத்தில் ஜப்பானுக்கு ஒரு முக்கியமான பல்துறை வணிக தூதுக் குழு பயணத்துக்கு 16 பேர் கொண்ட ஐஜெசிசிஐ குழு தயாராகி வருகிறது. ஜப்பானில் வர்த்தக சபைகள் மற்றும் அரசு அமைப்புகளுடன் கலந்துரையாடல்களுக்கும் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஜப்பானின் ஒசிசிஐ குழு தலைவர் ஹிரோமிட்சு மோரிஷிமா, "ஒசாகா மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே உற்பத்தி, நிதிச் சேவைகள், ஆள்சேர்ப்பு, கல்வி, தொழில்முறை சேவைகள், ஜவுளி, ஆடை வடிவமைப்பு, மின்சாரம், பிற வளர்ந்துவரும் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கண்டறிய இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய தளத்தை வழங்கியது' என்றார்.

நிகழ்வில் ஐஜெசிசிஐ பொதுச் செயலர் சுகுணா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இந்தச் சந்திப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 100 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஜப்பான் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக உரையாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.