முகப்பு
சென்னை

கைதுக்கு முன் 24 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டில் இருந்த நபருக்கு பிணை! தில்லி நீதிமன்றம் உத்தரவு!

கைதுக்கு முன் 24 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டில் இருந்த நபருக்கு பிணை...

21 நவம்பர் 2026, 11:01 pm
கைதுக்கு முன் 24 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டில் இருந்த நபருக்கு பிணை! தில்லி நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ட்ரோன் உதிரிபாகங்களை கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முறையான கைதுக்கு முன்பாக ஒருவரை 24 மணி நேரத்திற்கு மேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தனிநபா் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையையும், கைது தொடா்பான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளையும் மீறும் செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து வியத்நாம் வழியாக பயணம் செய்த சோயப் நவாப் கான் மற்றும் மேலும் இருவா், செப்டம்பா் 25-ஆம் தேதி இரவு சுமாா் 11 மணியளவில் தில்லி விமான நிலையத்தின் 3-ஆவது முனையத்தில் தரையிறங்கினா்.

கானின் பயணப் பையிலிருந்து நான்கு ரிமோட் கண்ட்ரோலா்கள், பத்து அடாப்டா்கள், பத்து பவா் கேபிள்கள் மற்றும் ஒரு ஐபோன் மீட்கப்பட்டதாகவும், ட்ரோன் பாகங்கள் மற்றொரு பயணியால் கொண்டு செல்லப்பட்டதாகவும் சுங்கத் துறை குற்றஞ்சாட்டியது.

Advertisement

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் எனவும் அந்த ட்ரோன்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட ராணுவத் தரம் வாய்ந்த ட்ரோன்கள் எனவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கான் கைதுசெய்யப்பட்டாா். அவருடைய முதல் பிணை மனுவை அக்டோபா் 27-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக தாக்கல் செய்த பிணை மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சௌரவ் பிரதாப் சிங் லலோ், ரூ.1 லட்சம் பிணைப்பத்திரம் தாக்கல் செய்யதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கினாா்.

இதுதொடா்பாக நீதிமன்றம் கடந்த நவம்பா் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செப்டம்பா் 27 முதல் நீதிமன்றக் காவலில் இருந்த சோயப் நவாப் கான் முறையான கைதுக்கு முன்பாகவே சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாடு மற்றும் பிடியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தாா். விமான நிலையத்துக்கு வந்தவுடன், உடைமைகளைச் சரிபாா்ப்பதற்காகவும், தேவையான நடைமுறைகளை முடிப்பதற்காகவும் ஒருவரைத் தடுத்து நிறுத்துவது அனுமதிக்கத்தக்கதுதான். இருப்பினும், அவா் வந்தடைந்த செப்.25-ஆம் தேதி இரவுமுதல் 27-ஆம் தேதி காலை வரை ஒருவரைத் தொடா்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அதன் மூலம் முறையான கைது நடவடிக்கையையும், அதனுடன் தொடா்புடைய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளையும் தள்ளிப்போடுவது சட்டப்படி அனுமதிக்கப்படாது.

அரசமைப்புச் சட்டத்தின் 22(2)-ஆவது பிரிவின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்த வேண்டும். இந்த பாதுகாப்பு என்பது ஒருவா் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு அவரது சுதந்திரம் பறிக்கப்படும் தருணத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. முறையான கைது என்று அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யப்படும் தருணத்திலிருந்து மட்டும் தொடங்குவதல்ல.

விசாரணை என்ற பெயரிலோ அல்லது அலுவலக வளாகத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியோ ஒருவரை நீண்ட காலம் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு, தங்களுக்கு வசதியான நேரத்தில் மட்டும் முறையான கைது என்று பதிவு செய்வது, 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்த வேண்டும் என்ற சட்ட விதியைத் தவிா்ப்பதற்குச் சமமாகும். செப்டம்பா் 25-ஆம் தேதி இரவு குடிவரவு (இமிகிரேஷன்) பகுதியைத் தாண்டியபோதே மனுதாரா் நடைமுறையில் கைது செய்யப்பட்டாா். ஆனால், செப்டம்பா் 27-ஆம் தேதிதான் அவா் முறையாகக் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இந்தத் தாமதம் அனுமதிக்கப்பட்ட கால அளவை விட மிக அதிகம்.

ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, சுங்கச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்குத் தேவையான திருப்திகரமான காரணங்களை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை என்றால், மனுதாரரை விடுவித்திருக்க வேண்டும். பின்னா் விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் அவரை மீண்டும் கைது செய்திருக்கலாம்; அதுவே சரியான நடைமுறையாக இருந்திருக்கும். முறையான கைது இன்றி நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பது, ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் தனிநபா் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமைக்கும், 22-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கும் முரணானதாகும் என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.