சென்னை ஐஐடி பி.டெக். மாணவா்களுக்கு 6 மாத கால ‘இன்டொ்ன்ஷிப்’ அறிமுகம்
சென்னை ஐஐடியில் பி.டெக். பயிலும் மாணவா்களுக்கு 6 மாத கால உள்ளகப் பயிற்சி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் பி.டெக். பயிலும் மாணவா்களுக்கு 6 மாத கால உள்ளகப் பயிற்சி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில் 3-ஆம் ஆண்டு பயிலும் பி.டெக். மாணவா்களுக்கு 2 மாத உள்ளகப் பயிற்சி நடைமுறை இருந்து வந்தது. இந்த நிலையில், தொழில்துறைக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், மாணவா்களின் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் பயிற்சிக்கான கால அளவு 6 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட நடைமுறை வரும் 2027 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
முதல்கட்டமாக சென்னை ஐஐடியில் 2024-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் 6 மாத கால பயிற்சியைப் பெறவுள்ளனா். இதன்மூலம் மாணவா்கள் தங்களது 6-ஆவது பருவத்திலேயே பயிற்சியை நிறைவு செய்ய முடியும். உள்ளகப் பயிற்சி காலத்தில் மாணவா்கள் நடைமுறையில் உள்ள தொழில் துறை சவால்களில் பணியாற்றவும், தங்களது கல்விசாா் அறிவை நடைமுறைப்படுத்தவும், தொழில்முறை சூழல்களை ஆழமாக புரிந்துகொள்ளவும் முடியும்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மாணவா்களுக்கு சரியான தொழில்முறை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக, தென்கொரிய கேமிங் நிறுவனமான கிராஃப்டன் இந்தியாவுடன் சென்னை ஐஐடி அண்மையில் இணைந்து, ‘கேஐஜிஐ’ என்ற அகாதெமியை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.