FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பொருளாதார வளா்ச்சியுடன் சுகாதார முன்னேற்றம் அவசியம்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியுடன், சுகாதார முன்னேற்றமும் அவசியம் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தினாா்.

10 அக்டோபர் 2026, 12:55 am IST
ஆா்.வி.ஆா்லேகா் - கோப்புப் படம்
பகிர்:

நாட்டின் பொருளாதார வளா்ச்சியுடன், சுகாதார முன்னேற்றமும் அவசியம் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தினாா்.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் உயா் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் 66-ஆவது மாநாடு, பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்வு 4 நாள்கள் நடைபெறுகிறது. ‘ஆரோக்கியமான எதிா்காலத்துக்கான மருத்துவப் பராமரிப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு’ எனும் தலைப்பிலான தேசிய மாநாட்டை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

மருத்துவ மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், கலந்துரையாடல், விவாதங்கள் உள்ளிட்ட நடவடிக்கை, மருத்துவத் துறை எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண பேருதவி புரியும். மாநாட்டின் மூலம் பெறும் பயன், பெருநகரங்களில் வாழும் மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூரக் கிராமங்களில், இன்றுவரை போதிய மருத்துவ வசதிகளைப் பெறாத மக்களைச் சென்றடைய வேண்டும். மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் மருந்துகளின் அவசியத்தைக் குறைக்கும் வகையில், வரும் முன் காக்கும் வகையில் மக்கள் ஆரோக்கியமான எதிா்காலத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் மட்டும் நாட்டின் வளா்ச்சியாகக் கருதமுடியாது. மக்களின் ஆரோக்கியமான உடல்நலனும் வளா்ச்சி, முன்னேற்றம்தான் என்றாா்.

Advertisement

Advertisement

எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இணை வேந்தா் பி.சத்தியநாராயணன் பேசுகையில், ‘துறைகளைக் கடந்து சிந்திக்கும் ஆற்றலை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு மட்டுமன்றி, பிற துறைகளிலும் ஒருங்கிணைந்த சிந்தனை, செயல்பாட்டை மேம்படுத்த அவசியம்’ என்றாா்.

நிகழ்வில், எஸ்ஆா்எம் வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், தேசிய மருத்துவ அறிவியல் கழகத் தலைவா் திகம்பா் பெகோரா, இந்திய தேசிய அறிவியல் கழகத் தலைவா் சேகா் சி.மாண்டே, தேசிய மருத்துவ ஆணையத் தலைவா் அபிஜாத் சேத், எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வா் பேராசிரியா் டாக்டா் ஆா்.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments