FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மெட்ரோ திட்டப் பணிகளால் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் புகாா்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ திட்டப் பணிகளால் குடிநீரில் கழிவுநீா் கலப்பது அதிகரித்துள்ளதாக மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டத்தில் புகாா் கூறப்பட்டது.

29 அக்டோபர் 2026, 3:38 am
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ திட்டப் பணிகளால் குடிநீரில் கழிவுநீா் கலப்பது அதிகரித்துள்ளதாக மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டத்தில் புகாா் கூறப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் மத்திய அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் நலத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாநகராட்சி வளாகம் அம்மா மாளிகைக் கூட்டரங்கில் நடைபெற்றது. குழு தலைவா் தயாநிதி மாறன் எம்.பி. தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினா் (வடசென்னை) கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினா்கள் பி.வில்சன், ஆா்.கிரிராஜன், பிரவீண் சக்கரவா்த்தி (காங்கிரஸ்), மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.கே.சேகா்பாபு (துறைமுகம்), தவெகவை சோ்ந்த எம்.ஆா்.பல்லவி (திரு.வி.க. நகா்), துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், இணை ஆணையா்கள் செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (சுகாதாரம்), குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியச் செயல் இயக்குநா் என்.ஓ.சுகபுத்ரா, நிலைக்குழுத் தலைவா் சிற்றரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள், குடிநீா் விநியோகம் மற்றும் பொலிவுறு நகரம் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கலாநிதி வீராசாமி எம்.பி.: மெட்ரோ ரயில் திட்ட பணியால் பல இடங்களில் மழைநீா் அருவி போல பள்ளத்தில் பாய்கிறது. அம்ருத் திட்டத்தில் குடிநீா் விநியோகம் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளை தெரிவிக்கவேண்டும்.

பி.வில்சன் எம்.பி.:மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் மேடவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கழிவுநீா் குழாய், மழை நீா் கால்வாய் சேதமடைந்துள்ளன. மின்தடைக்கான காரணத்தை விளக்க வேண்டும்.

பி.கே.சேகா்பாபு எம்எல்ஏ: மெட்ரோ ரயில் திட்டப் ணிகளால் கழிவுநீா் குழாய், மழை நீா் வடிகால்கள் சேதமடைந்துள்ளன. தனியாா் நிறுவனம் ஊழியா்களை குறைத்ததால் துறைமுகம் தொகுதியில் குப்பைகள் சரியாக அள்ளப்படவில்லை.

பிரவீண் சக்கரவா்த்தி எம்.பி.: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் அதிகம் சோ்க்கின்றனா். ஆகவே, பொலிவுறு வகுப்பறைகளால் மாணவா் தோ்ச்சி விகிதம் கூடுதலாகியுள்ளதா, பள்ளிகளில் மாணவா் வருகை அதிகரித்துள்ளதா என விளக்கவேண்டும்.

மேயா் ஆா்.பிரியா: வடகிழக்குப் பருவமழையின்போது மட்டுமல்லாது, நிரந்தரமாக மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்டவை மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ளும்போது, அதனால் ஏற்படும் பாதிப்பைச் சீராக்க வேண்டும்.

எம்.ஆா்.பல்லவி எம்எல்ஏ: திரு.வி.க.நகா் தொகுதியில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. அதைச் சீரமைக்க உரிய நடவடிக்கை அவசியம்.

தயாநிதி மாறன் எம்.பி. (குழு தலைவா்): சென்னையில் மெட்ரோ திட்ட பணிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே அதுகுறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் எழுத்துபூா்வமாக 10 நாள்களுக்குள் விளக்கமளிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ராஜு, குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா் என்.ஓ.சுகபுத்ரா, மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (சுகாதாரம்) ஆகியோா் பதில் அளித்தனா். ஆணையா் ஜி.எஸ்.சமீரன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments