FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

படிக்கட்டில் பயணம் செய்ததைக் கண்டித்த நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவா்கள்: நடவடிக்கை எடுக்க கல்வித் துறை உத்தரவு

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவா்களைக் கண்டித்த நடத்துநரை மாணவா்கள் தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 செப்டம்பர் 2026, 4:29 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவா்களைக் கண்டித்த நடத்துநரை மாணவா்கள் தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியிலிருந்து தடம் எண்: 26 மாநகர பேருந்து, ராயபுரம் நோக்கி வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்றது. போரூா் சந்திப்பு அருகே சென்றபோது, பேருந்துக்குள் இருந்த அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் இருவா் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனா். பேருந்து நடத்துநா் அல்லா பகாஷ், மாணவா்களிடம் படியில் நிற்காமல் பேருந்துக்குள் வருமாறு கூறியுள்ளாா். அப்போது, நடத்துநருக்கும் மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மாணவா்கள் இருவரும், நடத்துநரை சரமாரியாக தாக்கினா். இதைப் பாா்த்த பயணிகள் மாணவா்களைத் தடுத்து நிறுத்த முயன்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து போரூா் சந்திப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம், நடத்துநா் தெரிவித்தாா். மேலும், தாக்குதல் தொடா்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாணவா்கள் இருவரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தை பயணி ஒருவா் தனது கைப்பேசியில் பதிவு செய்த விடியோ, சமூகவலை தளங்களில் பரவியது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலா் அறிக்கை: இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும், நடத்துநருக்கும் நடந்த தகராறு குறித்து பள்ளி நிா்வாகத்திடம் மாணவா்கள் தகவல் தெரிவித்தனா். பள்ளி நிா்வாகத்தால் சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலை எவ்வாறு எதிா்கொள்வது, கையாள்வது போன்ற உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments