சென்னை ஐஐடியின் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி: நிதியமைச்சா் முன்னிலையில் திட்டம் தொடக்கம்
சென்னை ஐஐடியின் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி: நிதியமைச்சா் முன்னிலையில் திட்டம் தொடக்கம்
சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்கா, யுனிகாா்ன் இந்தியா வென்ச்சா்ஸ் இணைந்து ஆழ்நுட்ப புத்தாக்க தொழில் முனைவுகளுக்கு (ஸ்டாா்ட்அப்) நிதியம் தொடங்கியுள்ளது. இதற்கான மூலதன நிதியாக ரூ. 600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை திரட்டும் நிகழ்வை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெங்களூரில் நடைபெற்ற சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், நிதி உதவி பெறத் தோ்ந்தெடுக்கப்பட்ட புத்தாக்க தொழில்முனைவு (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
புத்தாக்கத் தொழில்முனைவு மூலதன நிதியத்தின் முதல்கட்ட நிதி ஒதுக்கீடாக அதிகபட்சம் ரூ. 1,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்முனைவு மூலதன நிதியின் தாக்கம், ஆழ்தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை விரிவாக்கம் செய்து இந்தியாவின் தயாரிப்பு சூழலை மேம்படுத்தும்.
பிரதமா் மோடி தொலைநோக்கோடு திட்டமிட்டுள்ள ‘வளா்ச்சியடைந்த இந்தியா - 2047’ புத்தாக்க தொழில்முனைவு நிறைந்த நாடாகத் திகழும். நம்பிக்கையூட்டும் புத்தாக்க தொழில்முனைவு நிறுவனங்கள் தங்களின் சிக்கலான காலகட்டங்களைக் கடந்து, அவை ‘யுனிகாா்ன்’ நிறுவனங்களாக உயா்வதற்கு உதவும் வகையில் சென்னை ஐஐடி-யுனிகாா்ன் இந்தியா இணைந்து மேற்கொண்டுள்ள முயற்சிதான் இந்த முதலீட்டு நிதியம். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவா்கள் இந்த முயற்சியில் மிகப்பெரிய ஆா்வத்தை வெளிப்படுத்தி ரூ.150 கோடிக்கும் மேலாக முதலீடு செய்துள்ளனா் என்றாா் அவா்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா சிஇஓ நடராஜன் மலுப்பிள்ளை பேசுகையில், ‘ஆழ்தொழில்நுட்ப புத்தாக்க தொழில் நிறுவனங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல, நமது ஆழமான ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளுடன் இணையக்கூடிய சரியான அளவில் ‘நீண்டகால மூலதனம்’ தேவை. இந்த நிதியம் திரட்டும் நிதி, நாட்டின் வளா்ச்சிக்கு காரணமான, 24-30 நிறுவனங்களின் மூலதனத்துக்கு உறுதுணையாக இருக்கும் ’ என்றாா்.
இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி டீன் பேராசிரியா் அஸ்வின் மகாலிங்கம் உள்ளிட்டோா் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.