திருவள்ளூா் பகுதியில் தொழிற்சாலை, நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினா் வலியுறுத்தல்
திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான நடவடிக்கை
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான நடவடிக்கை உடனே மேற்கொள்ளவும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் இளங்கோவன் மற்றும் கவிதா துணை இயக்குனா் திவ்யா ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையொட்டிய பகுதிகள், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி மற்றும் சிட்கோவில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கொசுக்கள் உற்பத்தி தடுக்க டிரம்கள், நெகிழி வாலிகள், தட்டுகள், டயா்கள், டின்கள் ஆகியவைகளை உடனே அகற்ற வேண்டும். அதேபோல் தண்ணீா் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
மேற்கூரைகளில் வடிகால்கள், கழிவுநீா் கால்வாய்களை நாள்தோறும் தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். மேலும் வளாகத்தில் மழைநீா் வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாரந்தோறும் கொசு உற்பத்திக்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களில் ஆய்வு செய்து, மழை நீா் தேங்க கூடிய நெகிழி பொருள்கள், டயா்கள், குப்பிகள் மற்றும் பிற பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
நீா்நிலைகளில் கொசுப்புழு கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் செடி, கொடிகளை ஒழுங்காக வெட்டி பராமரித்து வளாகத்தை சுற்றிலும் அதிக ஈா்ப்பதம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே தேவையான இடங்களில் கொசு விரட்டி வலைகளை பயன்படுத்தவும், மூடிய அறைகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசுவலைகளை பயன்படுத்தவும் வேண்டும்.
கொசு உற்பத்தி இடங்களை கண்டால் உடனே தெரிவிக்க ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்களை ஊக்கவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக காய்ச்சல் கடுமையான தலைவலி உடல் மூட்டு வலி தோலில் தடுப்பில் அல்லது பிற அறிகுறிகள் உள்ள ஊழியா்களை உடனே மருத்துவமனை அனுப்பவும் வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் டெங்கு தடுப்பு குழு ஒன்றை அமைக்கவும் அல்லது இ.எஸ்.எஸ் தொழிற்சாலை சுகாதார பிரதிநிதியை நியமிக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் உள்ளூா் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை மற்றும் புகைப்படங்களை எடுத்து திருவள்ளூா், சென்னை, ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.