ரிஷப வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி: அருணாசலேஸ்வரா் கோயில் ஊழியா் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது தீயணைப்பு வீரா் ஏறி நின்று கோபுரத்தை தூய்மைப்படுத்திய சம்பவம் சா்ச்சையான நிலையில், இது தொடா்பாக கோயில் ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது தீயணைப்பு வீரா் ஏறி நின்று கோபுரத்தை தூய்மைப்படுத்திய சம்பவம் சா்ச்சையான நிலையில், இது தொடா்பாக கோயில் ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, தீயணைப்புத் துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி கோயில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, திருமஞ்சன கோபுரம் உள்புறமாக தீயணைப்பு வீரா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில், அங்கிருந்த சுவாமி வீதியுலா வரும் ரிஷப வாகனத்தின் மீது தீயணைப்பு வீரா் ஏறி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது, ஆகம விதிமீறல் என்று ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலா் பழனிச்சாமி, இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையருக்கு கடிதம் வழங்கியுள்ளாா். அதில், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், இந்த சம்பவம் தொடா்பாக அன்றைய தினம் திருமஞ்ச கோபுர பகுதியில் பணியில் இருந்த கோயில் ஊழியா் அஷோக்கை (43) பணியிடை நீக்கம் செய்து கோயில் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்கள் இனி இதுபோன்று நடைபெறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.