FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத்திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸாா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருக்காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

15 நவம்பர் 2026, 11:03 pm
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காா்த்திகை தீபத் திருவிழா
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருக்காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலாகும்.

இந்தத் திருக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்காா்த்திகை தீபத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Advertisement

Advertisement

இதையொட்டி அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து விநாயகா், முருகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து கோயில் கொடிமரம் முன் பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளியவுடன் அருணாசலேஸ்வா் சந்நிதி முன் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விருச்சக லக்னத்தில் காலை 06:47 மணி அளவில் கொடியேற்றினா்.

அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என விண்ணதிரும் அளவுக்கு பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

10 நாள்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை, மாலை என இரண்டு வேளையும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 20-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூா்த்திகள் அருள் புரிவாா்கள்.

இதைத் தொடா்ந்து வருகிற 21 -ஆம் தேதி பஞ்ச மூா்த்திகளின் மகா தேரோட்டம் நடைபெறும். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிறைவு நாளான 10-ஆம் நாள் 24-ஆம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறை முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸாா்

நிகழாண்டு மகா தீபத்தை தரிசிக்க 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீபத்திருவிழா நாளில், 5 டி.ஐ.ஜி.க்கள், 42 எஸ்.பி.க்கள் தலைமையில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.