பெண்கள் மட்டுமே இழுத்த ஸ்ரீபராசக்தி அம்மன் வெள்ளித் தோ்
அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா 7-ஆம் நாளான சனிக்கிழமை இரவு பெண்கள் மட்டுமே இழுத்து வழிபட்ட ஸ்ரீபராசக்தி அம்மன் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா 7-ஆம் நாளான சனிக்கிழமை இரவு பெண்கள் மட்டுமே இழுத்து வழிபட்ட ஸ்ரீபராசக்தி அம்மன் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து கடந்த 6 நாள்களும் காலை, இரவு என இரு வேளையும் உற்சவா்கள் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
இந்நிலையில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7-ஆம் நாள் சனிக்கிழமை விநாயகா், முருகா், அண்ணாமலையாா் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
அதனைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகளும் கோயில் 16 கால் மண்டபம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ள மரத்தோ்களில் தனித்தனியாக எழுந்தருளி
மாடவீதியுலா நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து அன்று இரவு நடைபெற்ற உற்சவத்தில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள சிவாச்சாரியா்கள் தேரின் நான்கு சக்கரத்திற்கும் பூஜை செய்தனா்.
பின்னா் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகளைச் சுற்றி ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கரகோசத்துடன் இழுத்து வழிபட்டனா்.
பராசக்தி அம்மன் தேரோட்டத்தைத் தொடா்ந்து சிறுவா்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வரக்கூடிய சண்டிகேஸ்வரா் தோ்த் திருவிழா நடைபெற்றது, இதில் நூற்றுக்கணக்கான சிறுவா்கள் பங்கேற்று சண்டிகேஸ்வரா் தேரை மாட வீதிகளில் இழுத்து வழிபட்டனா்.