கொள்முதல் நெல்லுக்கு பணம் வழங்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்
செய்யாறில், விவசாயிகள் சங்கத்தினா் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்க
செய்யாறு: செய்யாறில், விவசாயிகள் சங்கத்தினா் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டும், பல்டி அடித்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள டிபிசி மற்றும் என்சிசிஎப் அமைப்பினா் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, 5 மாதங்களுக்கு மேலாகியும் உரிய பணம் வழங்கவில்லையாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், செய்யாறு சாா்- ஆட்சியா் மற்றும் வட்டாட்சியா் என பல்வேறு அலுவலகங்களில் மனுக்களை கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். மேலும், செய்யாறு பகுதிக்கு வருகை தந்த தமிழக உணவுத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் புகாராகத் தெரிவித்தபோது,
Advertisement
Advertisement
சில தினங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகை செலுத்தப்படும் என்றும் அமைச்சா் உறுதி அளித்த நிலையில், ஒரு மாத காலமாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அமைப்பு மூலம் பணம் செலுத்தப்படவில்லையாம்.
அதனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உடனடியாக பணம் வழங்க வலியுறுத்தியும், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 வீதம் கூடுதலாக வசூலிப்பதைத் தடுக்கக் கோரியும், மாவட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாழ்குடை புருஷோத்தன் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள், செய்யாறு ஆரணி கூட்டுச் சாலைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் மண் சோறு சாப்பிட்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும் குட்டிக்கரணம் போட்டும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.