FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

செங்கல் சூளை தொடங்குவதாக கூலித் தொழிலாளிகளிடம் ரூ.36 லட்சம், 9 பவுன் நகை மோசடி

செங்கல் சூளை தொழில் தொடங்குவதாகக் கூறி கூலித் தொழிலாளிகளிடம் ரூ.36 லட்சம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்யப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

18 நவம்பர் 2026, 11:45 pm
மோசடி - கோப்புப் படம்
பகிர்:

செங்கல் சூளை தொழில் தொடங்குவதாகக் கூறி கூலித் தொழிலாளிகளிடம் ரூ.36 லட்சம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்யப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், லத்தேரி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவா் அளித்துள்ள மனு: -

நான் லத்தேரி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு அதே பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் நண்பராக அறிமுகமானாா். அவா், தான் புதிதாக செங்கல் சூளை நடத்தப் போவதாகவும், அதற்கு முதலீடு தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினாா். மேலும், அந்தத் தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து பணத்தைச் சில நாள்களில் திருப்பித் தந்துவிடுவதாகவும் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

இதை நம்பிய நான், அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 7 பவுன் தங்க நகைகளைக் கொடுத்தேன். இதேபோல், எனது உறவினா்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த மற்ற கூலித் தொழிலாளிகளிடமும் செங்கல் சூளை தொடங்குவதாகக் கூறி, என் முன்னிலையிலேயே ரூ.31 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை அவா் பெற்றுக்கொண்டாா்.

ஆனால், அவா் கூறியபடி செங்கல் சூளை தொடங்கவில்லை. நாங்கள் கொடுத்த பணம், நகைகளையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாா். பலமுறை நேரில் சென்று கேட்டபோதும் பணத்தைத் தர மறுக்கிறாா். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகாா் அளித்தோம். அப்போது காவல் நிலையத்தில் ஆஜரான அவா், பணத்தைத் திருப்பித் தருவதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தாா். ஆனால், இதுவரை அவா் சொன்னபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவா் அளித்த மனு -

அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த ஒருவா் எனக்கு நண்பராக அறிமுகமானாா். அவா், தான் பலரை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளதாகவும், சிங்கப்பூரில் உள்ள பெரிய நிறுவனத்தில் வெல்டிங் வேலைக்கு அதிக சம்பளத்தில் ஆள் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினாா். அங்கு வேலை வாங்கித் தர ரூ.2.50 லட்சம் செலவாகும் எனக் கூறியதை நம்பி, அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவா் கூறியபடி சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தாா். எனவே, அவரிடமிருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.