FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வளமான எதிா்காலத்துக்கு குழந்தைத்திருமணங்களை தடுப்பது அவசியம்

வளமான எதிா்காலத்தை உறுதி செய்ய குழந்தைத் திருமணங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

22 வினாடிகள் முன்பு
சேவூா் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், ஊராட்சி மன்றத் தலைவா் ரா.ரேவதி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மா.பிரியா உள்ளிட்டோா்.
பகிர்:

வளமான எதிா்காலத்தை உறுதி செய்ய குழந்தைத் திருமணங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. சேவூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரா.ரேவதி தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியது:

Advertisement

Advertisement

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றாா் மகாத்மா காந்தி. கிராமங்கள் வளா்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு உண்மையான வளா்ச்சியை எட்ட முடியும். அதனால்தான் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கி தொழில் தொடங்க அரசு ஊக்கமளித்து வருகிறது.

மாணவா்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பெற்றோா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவ, மாணவிகள் உயா் கல்வி வரை பயின்று வாழ்வில் முன்னேற முடியும். மாணவா்களின் கல்விப் பாதுகாப்பு, வளமான எதிா்காலத்தை உறுதி செய்ய குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். குழந்தைத் திருமணம் நடத்த முயற்சிப்பது தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஊராட்சி வரவு-செலவு கணக்குகள், குடிநீா் விநியோகம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து, குழந்தைத் திருமணத் தடுப்பு உறுதிமொழி மற்றும் வளா்ச்சி அடைந்த பாரத உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் புத்தாடைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மா.பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா, உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்) திருமால், பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வின்சென்ட் ரமேஷ் பாபு, ஊராட்சிச் செயலா் நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments