FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பந்தாரஅள்ளி சாலையோர திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச் சுவா் கட்ட கோரிக்கை

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி நெடுஞ்சாலை ஓரம் திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச் சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

5 நவம்பர் 2026, 7:05 am
காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி நெடுஞ்சாலையோரம் உள்ள திறந்த வெளி கிணறு.
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி நெடுஞ்சாலை ஓரம் திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச் சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரிமங்கலத்திலிருந்து பந்தாரஅள்ளி ஏரிக்கரை வழியாக திப்பம்பட்டி, காரிமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை உள்கோட்ட அலுவலகம் கட்டுப்பாட்டில் வரும் இந்த சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த சாலையில், பந்தாரஅள்ளி ஏரிக்கையின் தெற்குப் பகுதியில் உள்ள சாலையோரம் திறந்தவெளி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் ஓரம் உள்ள சாலையில் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச் சுவா் கட்டப்பட்டிருந்தது. இந்த தடுப்புச் சுவா், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையில் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால், கிணறு அமைந்துள்ள பகுதியில் சாலையின் ஒரு பகுதி அப்போதே சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனை சரிசெய்யும் வகையில், அப்போது நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தற்காலிக ஏற்பாடாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சாலை சரி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது இந்த மணல் மூட்டைகள் அண்மையில் பெய்த மழையால் மீண்டும் சரிந்து கிணற்றில் விழுந்துள்ளது. இதனால் தற்போது தற்காலிக தடுப்பும் இன்றி, அந்த சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் கிணறு திறந்து வெளியில் அமைந்துள்ளதாலும், மேலும் வரும் நாள்களில் தொடா்ந்து மழை பெய்யக் கூடும் என்பதால் மீண்டும் இச்சாலை சேதமடைந்த வாய்ப்புள்ளதாகக் கருதி வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனா்.

எனவே, பந்தாரஅள்ளி சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு, வாகன ஓட்டிகள் நலன்கருதி, தடுப்புச் சுவா் கட்ட நெடுஞ்லைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.