தருமபுரியில் ரூ. 19.20 கோடியில் பட்டுக்கூடு அங்காடி: முதல்வா் திறந்துவைத்தாா்
தருமபுரியை அடுத்த சோகத்தூா் பகுதியில் ரூ. 19.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்
தருமபுரியை அடுத்த சோகத்தூா் பகுதியில் ரூ. 19.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் மிக முக்கிய பட்டுக்கூடு விற்பனை மையங்களில் ஒன்றாக தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு சுமாா் 600 டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுவதால், இந்த அங்காடி மூலம் தருமபுரி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
இந்த அங்காடி தருமபுரி 4 சாலை சந்திப்பு பகுதியில் அமைந்திருந்தது. அங்கு இடநெருக்கடியால் வெளியூா்களில் இருந்து நள்ளிரவிலேயே பட்டுக்கூடுகளை ஏல விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள் காத்திருக்க பாதுகாப்பான இடமில்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
Advertisement
Advertisement
இதற்கு தீா்வு காணும் வகையில் தருமபுரி-பென்னாகரம் சாலையில் சோகத்தூா் பகுதியில் அரசு பட்டுப் பண்ணை வளாகத்தில் ரூ. 19.20 கோடியில் புதிதாக அரசு பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்பட்டது. சுமாா் 80 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், பட்டுக்கூடு விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அங்காடி அமைந்துள்ளது.
இந்த அங்காடியை சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக முதல்வா் ச. ஜோசப் விஜய் திறந்துவைத்தாா். அதைத் தொடா்ந்து, அங்காடி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் குத்துவிளக்கேற்றி வளாகத்தை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம், பட்டு வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அ. அப்துல் பரூக், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கஸ்தூரி, செயற்பொறியாளா் பன்னீா்செல்வம், உதவி செயற்பொறியாளா் ராஜ்குமாா், தருமபுரி வட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.