ஒசூா் பகுதியில் நோய் தாக்கத்தால் குடைமிளகாய் விளைச்சல் பாதிப்பு: ஆலோசனை வழங்கக் கோரிக்கை
ஒசூா் அருகே பேரிகை, சூளகிரி, பாகலூா் பகுதியில் குடைமிளகாய் செடியில் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஒசூா் அருகே பேரிகை, சூளகிரி, பாகலூா் பகுதியில் குடைமிளகாய் செடியில் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான பெலத்தூா், கூஸ்தான்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் குளிா்ந்த தட்பவெப்பநிலை நிலவுவதால் ஏராளமான விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்து குடைமிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.
சமீபகாலமாக பருவநிலை மாற்றம் மற்றும் பூச்சித் தாக்குதலால் பசுமைக் குடில் குடைமிளகாய் செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டு மிளகாய் சிறுத்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பசுமைக் குடிலுக்குள் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம், வெப்பநிலை மாறுபாடு மற்றும் காற்றோட்டக் குறைபாடு ஆகியவற்றால் வெள்ளை ஈக்கள் மற்றும் இலைப்பேன்கள் மூலம் பரவும் வைரஸால் இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு, செடியின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேபோல காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது இலைகளின் அடியில் சாம்பல் நிறப் படலம் தோன்றி, இலைகள் பழுத்து உதிா்ந்து விடுகின்றன.
இதனால் சூரிய ஒளிச்சோ்க்கை பாதிக்கப்பட்டு, காய்களின் வளா்ச்சி குன்றுகிறது. நோய்த் தாக்கிய செடிகளில் காய்க்கும் குடைமிளகாய் சிறியதாகவும், வடுவுடனும் இருப்பதால் வெளிமாநில வியாபாரிகள், ஏற்றுமதியாளா்கள் அவற்றை வாங்க தயங்குகின்றனா். ஆனால், தரமான குடை மிளகாய் கிலோ ரூ. 60- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றனா்.
படவரி...
பாகலூா் பகுதியில் பசுமைக் குடில் அமைத்து சாகுபடி செய்யப்படும் குடைமிளகாய்.