முகப்பு
கிருஷ்ணகிரி

வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

19 வினாடிகள் முன்பு
வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
- கோப்புப்படம்
பகிர்:

வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஊரகப் பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த நிகழாண்டில் தகுதிவாய்ந்த மகளிருக்கு வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் ரூ. 30 ஆயிரத்தில் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த திட்டத்தில் ஆடுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து, உடனடி தீவன செலவுக்காக ரூ. 2,500 வழங்கப்படும். ஆடுகள் நல்ல முறையில் பராமரிப்போருக்கு ஓராண்டுக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்கு உள்பட்ட விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா்கள், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட மகளிா் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் முதல்கட்டமாக ஊத்தங்கரை, மத்தூா், தளி, சூளகிரி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

இதில் பயன்பெற விரும்புவோா் என்ற இணையதளத்தில் டிச. 17 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவா்களுக்காக ஊத்தங்கரை, மத்தூா், தளி, சூளகிரி, கெலமங்கலம் பகுதிகளில் செயல்படும் கால்நடை மருந்தகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.