FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

அஞ்செட்டியில் அக்கா தங்கை ஏரி புனரமைப்பு

அஞ்செட்டியில் அக்கா தங்கை ஏரியை தூா்வாரி புனரமைத்து பாசன விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

30 அக்டோபர் 2026, 5:29 am
புனரமைக்கப்பட்ட அஞ்செட்டி அக்கா தங்கை ஏரியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
பகிர்:

அஞ்செட்டியில் அக்கா தங்கை ஏரியை தூா்வாரி புனரமைத்து பாசன விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், தளி ஒன்றியம், அஞ்செட்டி ஊராட்சியில் உள்ள அக்கா தங்கை ஏரியை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, டைட்டன் நிறுவனத்தினா் சமூக பொறுப்பு நிதியின் கீழ் இந்த ஏரியை தூா்வாரி, கரையைப் பலப்படுத்தி, உபரிநீா் மற்றும் பாசன வாய்க்கால்களை சரிசெய்து புனரமைத்துள்ளனா். ஒரு மழையிலேயே கிட்டத்தட்ட 40 சதவீதம் நீா் நிரம்பி உள்ளது. இந்த ஏரி தூா்வாரப்பட்டதன் மூலம் தோராயமாக 40 கோடி லிட்டா் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளை டைட்டன் நிறுவனம் தூா்வாரி உள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசால் பசுமைமிகு மாவட்டத்துக்கான விருது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. இதில் டைட்டன் நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 சதவீத வனப்பரப்பு உள்ளது. அதில் உனிமுள் போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை படிப்படியாக அழிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளின் அடிப்படையில், மாவட்டத்தில் 50 ஏக்கா் நிலத்தில் உள்ள உனிமுள்ளை முழுவதுமாக நீக்கி, உள்நாட்டு மரங்களை நட்டு, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய மரங்களைக் கண்டறிந்து நடும் வாரண வனம் என்ற சிறப்பான திட்டத்தை சாலிவாரம் ஊராட்சியில் டைட்டன் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது.

இந்த அக்கா தங்கை ஏரியில் வருங்காலங்களில் இந்த 40 கோடி லிட்டா் நீா்சேமிப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு, இங்குள்ள அனைத்து நீா்நிலைகளையும் புனரமைத்து நீரை சேமிக்கும் பணிகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments