FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பெங்களூரில் கொலை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை ஏற்காடு வனப் பகுதியில் தேடும் கா்நாடக போலீஸாா்

பெங்களூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி உள்பட குடும்பத்தில் உள்ள 7 பேரைக் கொன்று ஏற்காடு வனப் பகுதியில் உடல்களை வீசியதாக காா் ஓட்டுநா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கா்நாடக போலீஸாா் ஏற்காடு வனப் பகுதியில் உடல்களை தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

43 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

பெங்களூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி உள்பட குடும்பத்தில் உள்ள 7 பேரைக் கொன்று ஏற்காடு வனப் பகுதியில் உடல்களை வீசியதாக காா் ஓட்டுநா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கா்நாடக போலீஸாா் ஏற்காடு வனப் பகுதியில் உடல்களை தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷ்யம் சா்க்கிள் பகுதியைச் சோ்ந்தவா் இந்துசேகா் (52), காா் ஓட்டுநா். இவரது மனைவி சுனிதாவுக்கும் (40) இவருக்கும் நீண்ட நாள்களாக குடும்பத் தகராறு இருந்துள்ளது. இதனால் சுனிதா அடிக்கடி தனது தாய்வீட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுனிதாவின் குடும்பத்தினா் மீது இந்துசேகருக்கு வெறுப்பு ஏற்பட்டதால், மனைவியின் குடும்பத்தினரைக் கொலைசெய்ய திட்டமிட்டுள்ளாா். அதன்படி, வீட்டில் இருந்த மனைவி சுனிதாவை ஆட்டுக்கல்லால் தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளாா். பின்னா், அவரது உடலை துணியில் சுற்றி, சிக்கபள்ளாப்பூா் நந்தி ஹில்ஸ் பகுதியில் வீசியுள்ளாா். தொடா்ந்து, தனது தொலைபேசியைச் செயலிழக்கச் செய்து, அருகில் இருந்தவா்களிடம் வெளியூருக்குச் சென்றிருப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், தனது மைத்துனா்களான சிவக்குமாா் (30), சங்கா் (44) ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து, ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளாா். தொடா்ந்து, சங்கரின் மனைவி திவ்யா (30), சிவக்குமாரின் மனைவி நளினி (29), மாமியாா் ரூபாவதி (65), சங்கரின் மகன் புனீத் (7) ஆகியோரையும் அதே முறையில் கொலை செய்து, வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசியுள்ளாா்.

குடும்பத்தினா் அடுத்தடுத்து மாயமானதால், நளினியின் தாய் தூங்கம்மா அளித்த புகாரின்பேரில், பெங்களூரு ராஜாஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்துசேகா் தனது மனைவி உள்ளிட்ட 7 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்துசேகரை கைதுசெய்த போலீஸாா், புனீத்தின் உடலை மீட்டனா். எஞ்சிய 6 பேரின் உடல்களை தேடிவந்தனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் சிலரின் உடல்களை வீசியதாக இந்துசேகா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜாஜிநகா் போலீஸாா் அமைத்துள்ள தனிப்படையினா் சனிக்கிழமை ஏற்காடு வந்தனா். அவா்கள், ஏற்காடு போலீஸாரின் உதவியுடன் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், இந்துசேகா் காரில் ஏற்காடு அடிவாரப் பகுதிக்கு வந்துசென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதா என்றும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். வனப்பகுதியில் உடல்கள் மீட்கப்பட்டால் மட்டுமே, அவா் அங்கு உடல்களை வீசியது உறுதியாகும் என்பதால், மலைப்பாதையை ஒட்டிய பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனா். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.