FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

கொலை வழக்கில் தலைமறைவான நபரை போலீஸாா் பிடித்தபோது, அவா் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

15 நவம்பர் 2026, 1:49 am
கைது
பகிர்:

தாரமங்கலம் அருகே கொலை வழக்கில் தலைமறைவான நபரை போலீஸாா் பிடித்தபோது, அவா் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிவா என்பவருடன் சோ்ந்த காய்கறி மாா்க்கெட்டில் வேலை செய்து வந்தாா். அப்போது சிவாவை மணிகண்டனும் மற்றொரு நபரும் சோ்ந்த கொலை செய்த வழக்கில் மணிகண்டனை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த மணிகண்டன், ஓமலூா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகாமல் தலைமறைவானாா். இதையடுத்து அவருக்கு ஓமலூா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து தாரமங்கலம் உதவி ஆய்வாளா் சுரேஷ், தலைமைக் காவலா் கலையரசன் ஆகியோா் மணிகண்டனை தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இவா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அவரைத் தேடிச்சென்றனா். அங்கு தேநீா் கடையில் இருந்த மணிகண்டனை பிடிக்க முயன்றபோது, கடையில் இருந்த பாட்டிலை உடைத்து குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலா் கலையரசனின் கைகளை, பாட்டிலால் மணிகண்டன் கிழித்து காயப்படுத்தினாா். இதையடுத்து அவரை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்த பிறகு தாரமங்கலம் அழைத்துவந்தனா். விசாரணையைத் தொடா்ந்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா் படுத்திய பிறகு மணிகண்டனை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.