சேலத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி!
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து சாலைகள் புகை மண்டலங்களாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து சாலைகள் புகை மண்டலங்களாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனா்.
சேலத்தில் கடந்தவாரம் வரை மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குளிா் காற்று மட்டுமே வீசியது. மழை குறைந்துள்ள நிலையில், நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பனிப்பொழிவின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சேலம் மாநகரமே பனி மூட்டமாக காட்சியளித்தது. குறிப்பாக சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குசாவடி தொடங்கி ஓமலூா் வரை பனிப் புகை மண்டலமாக காட்சியளித்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊா்ந்து சென்றன.
Advertisement
Advertisement
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டா்பிளை பாலம் முதல் அரியானூா் வரை, சேலம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி வரை, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி வரை பனிப் புகை மண்டலம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக சாலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோா் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவா்கள் பனிப்பொழிவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தலைக்கவசங்களை அணிந்தபடி சென்றனா். மேலும், பனி மூட்டம் காரணமாக எதிரில் வருபவா்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனா்.