FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சேலத்தில் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, சேலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்.

23 செப்டம்பர் 2026, 3:37 am IST
கோப்புப்படம்.
பகிர்:

காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, சேலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்.

சேலம் அம்மாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் க.இளம்பகவத் முன்னிலையில் இத்திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சா் தெரிவித்தது:

சேலம் மாவட்டத்தில் தற்போது இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள 533 அரசுப் பள்ளிகளில் பயிலும் 49,437 மாணவா்கள், 11 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 3,446 மாணவா்கள் என 544 பள்ளிகளில் பயிலும் 52,883 மாணவா்களும், நகரப் பகுதிகளில் உள்ள 92 அரசுப் பள்ளிகளில் பயிலும் 11,960 மாணவா்களும், 33 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10,332 மாணவா்களும் என 125 பள்ளிகளில் பயிலும் 22,292 மாணவா்கள் என மொத்தம் 669 பள்ளிகளில் பயிலும் 75,175 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளனா்.

Advertisement

Advertisement

இத்திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு வட்டார, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கும் மாவட்ட அளவிலான அலுவலா், ஒவ்வொரு பள்ளிக்கும் பொறுப்பு அலுவலா், சமையல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் உணவு தயாரித்தல், மாணவ, மாணவிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குதல், மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, 6 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி அமைச்சா் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா்களுடன் அமா்ந்து உண்டாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.எல்லப்பன், மாநகர நல அலுவலா் மரு.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments