திருப்பரங்குன்றம்! முருகனின் முதல் படை வீட்டில் முடிசூடப் போவது யார்?
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியின் நிலவரம் குறித்து...
முருகனின் முதல் படை வீடு எனும் பெருமைக்குரியது திருப்பரங்குன்றம். கோயில் நகரம், வளர்ந்து வரும் சுற்றுலாத் தலம் போன்ற சிறப்புகளைக் கொண்ட பேரவைத் தொகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.
காமராஜர் பல்கலைக்கழகம், சர்வதேச விமான நிலையம் தொழில்நுட்பப் பூங்கா, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இந்தத் தொகுதியின் சிறப்பம்சங்கள்
மதுரை மாநகராட்சியின் 57-ஆவது வார்டு முதல் 63-ஆவது வார்டு வரை. 94-ஆவது வார்டு முதல் 99-ஆவது வார்டு வரை மொத்தம் 13 வார்டுகளும், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 ஊராட்சிகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
Advertisement
திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் சுமார் 50 சதவீதம் போ உள்ளனர். இவர்கள் தவிர சௌராஷ்டிரா, நாயுடு, நாடார், பிள்ளைமார், தலித், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர்.
ராஜன் செல்லப்பா: அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தொகுதியில் நன்கு அறிமுகமானவர் ஏற்கெனவே மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்தவர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் நலத் திட்ட உதவிகள் வழங்குவது இவருக்குச் சாதகமாக உள்ளது. கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகள் அளித்த நிலையில் அவற்றை முழுமையாக நிறைவேற்றாதது இவருக்கு பாதகமான அம்சம்.
கிருத்திகா தங்கப்பாண்டி: திருப்பரங்குன்றம் தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகள், இலவசமாக பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தது. திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்களை ஆன்மிகப் பயணம் அழைத்துச் சென்றது திமுக வேட்பாளர் எஸ்.கிருத்திகா தங்கப்பாண்டிக்கு சாதகமான அம்சம். இந்தத் தொகுதியில் முதல் முறையாக திமுக சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவது கூடுதல் பலம் ஜாதி ரீதியான வாக்குகள் பிரிவது இவருக்கு பாதகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சி.டி.நிர்மல்குமார்: தவெக கட்சித் தலைவரும், நடிகருமான விஜய்யின் செல்வாக்கு, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இளைஞர்கள் தேர்தல் பணியாற்றுவது தவெக வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்குச் சாதகமாக உள்ளது. அரசியலில் முன் அனுபவமுள்ள பிரமுகர்கள் இல்லாதது, சரியான திட்டமிடல் இல்லாதது இவருக்கு பாதகமாக உள்ளது.
சத்யாதேவி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் து.சத்யாதேவி கல்லூரிப் பேராசிரியை என்பதும் பெண் வேட்பாளர், அவரது தனிப்பட்ட வாக்குறுதிகள் உள்ளிட்டவை இவருக்கு சாதகமான அம்சம். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதும் இவருக்கு சாதகமாக உள்ளது. அதேநேரத்தில் தொகுதியில் அறிமுகமின்மை இவரது பலவீனமாக உள்ளது.
அரசியல் கட்சிகளின் செல்வாக்குள்ள பகுதிகள்!
திருப்பரங்குன்றம் சட்டப்பே ரவைத் தொகுதியைப் பொருத்தவரை திருப்பரங்குன்றம் திருநகர், ஹார்விபட்டி தனக்கன்குளம், வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகள் திமுகவுக்கும், அவனியாபுரம், வில்லாபுரம், வலையங்குளம் எலியார்பத்தி, சோளங்குருணி, நாகமலைப்புதுக்கோட்டை, வடபழஞ்சி உள்ளிட்ட பகுதிகள் அதிமுகவுக்கும் செல்வாக்குள்ள பகுதிகளாக உள்ளன.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சாலை, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம், திருநகரில் அறிவியல் பூங்கா தொடங்கப்பட்டுள்ளன.
மக்களின் எதிர்பார்ப்பு: திருப்பரங்குன்றத்தில் மேம்பாலத்துக்கு அருகே அணுகு சாலை அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். தென்பழஞ்சி, வேடர்புளியங்குளம், சாக்கிலிபட்டி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களுக்கு வைகைத் தண்ணீரைக் கொண்டு வர வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.
திருப்பரங்குன்றம் நகர்ப்பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் உள்ள நிலையில் விளையாட்டு மைதானம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் விழா நாள்கள் திருமண முகூர்த்த நாள்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் தொழில்சாலையைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மல்லிகைப் பூ விவசாயம் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியில் வாசனைத் திரவிய உற்பத்தி ஆலையைத் தொடங்கி, பூக்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள் அதிகம் விளைவதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் குளிர்பதன மையம் அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த கால வெற்றிகள்: திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொருத்தவரை அதிமுக 9 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள்
பெற்ற வாக்கு விவரம்:
வி.வி.ராஜன்செல்லப்பா: அதிமுக - 1,03,683. எஸ்.கே.பொன்னுத்தாய்: மார்க்சிஸ்ட்- 74,194
இரா.ரேவதி - நாம் தமிழர் கட்சி - 22.722