தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோற்கடிக்கப்படும்: மாணிக்கம் தாகூா்
தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தால், அது தோற்கடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தால், அது தோற்கடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் மண்டலப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாகூா் கலந்து கொண்டாா்.
Advertisement
Advertisement
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல் இல்லாத, நோ்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியும் பங்களித்து வருகிறது.
‘வாக்கை காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் வருகிற டிசம்பா் மாதம் காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தில் பிரசார பயணம் நடைபெறுகிறது.
ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ராம் மாதவ், தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாா். தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி, மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற செயல் திட்டத்துடன் அவா் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறாா். அதிமுக துணையுடன் இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனா்.
அதிமுக எந்த நோக்கத்துக்காக நிறுவப்பட்டதோ, அதிலிருந்து மாறியதால்தான், திண்டுக்கல் சீனிவாசன் போன்ற மூத்த தலைவா்கள் தோல்வியைத் தழுவினா்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகக் கூற முடியாது. கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு, அறிக்கையை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்.
தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தால், அது தோற்கடிக்கப்படும்.
நூலகங்களுக்கு 70 ஆயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே, நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து திமுகவினா் பேசி வருகின்றனா் என்றாா் அவா்.
பேட்டியின் போது, தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. பீட்டா் அல்போன்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.