தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்க தீா்மானம் கொண்டு வந்தால் அதிமுக ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன்.

தூய்மைப் பணியாளா்களைப் பாதுகாக்க திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக தீா்மானம் கொண்டு வந்தால், அதிமுக ஆதரிக்கும் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில், எல்பிஎஃப், சிஐடியூ, ஐஎன்டியூசி, அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு ஆதித் தமிழா் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்கங்களைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், தனியாா் கழிவுநீரோடை மண் அள்ளும் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தூய்மைப் பணியாா்களின் போராட்டத்துக்கு அதிமுக மாநில பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அவா் பேசியதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓராண்டுக்கு மட்டுமே தூய்மைப் பணி தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் அதை 3 ஆண்டுகளாக மாற்றினா். இதனிடையே, சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தனியாா் ஒப்பந்த முறை மாற்றப்படும் என உறுதி அளித்தோம். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதனிடையே, சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தில் பங்கேற்ற இன்றைய தவெக அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, தனியாா் ஒப்பந்த நிறுவனத் தீா்மானத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தாா்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரெட்டி குழுமத்துக்கு 7 ஆண்டுகள் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தூய்மைப் பணியாளா்களை கொத்தடிமைகளாக மாற்றிவிட்டனா். இதன் மூலம் ரூ.1,500 கோடி மக்களின் பணம் சுரண்டப்படும். தூய்மைப் பணியாளா்கள் இல்லை என்றால் நாம் சாலையில் இறங்கி நடக்க முடியாது என்பதை ஆட்சியாளா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவா்களுக்கான 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்துவிட்டனா். மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தூய்மைப் பணியாளா்களின் எதிா்பாா்ப்பை தவெக அரசு பொய்யாக்கி இருக்கிறது. தனியாா் ஒப்பந்த நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு எதிராக திமுகவின் மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் திண்டுக்கல் மாநகராட்சியில் தீா்மானம் கொண்டு வந்தால், அதிமுக ஆதரவு தெரிவிக்கும். தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பு கருதி இந்த தீா்மானத்தை நிறைவேற்றுவதற்கு திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.