திண்டுக்கல்: திமுக பிரமுகர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி வெட்டிக் கொலை!
திமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமானவர் 'பாத்ரூம்' முருகன். இவர், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், இன்று (அக். 6) காலை தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலை, நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தத் தாக்குதலில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், வீரபத்திரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The incident in Dindigul, where the prime accused in a DMK functionary's murder case was hacked to death while being chased, has caused a sensation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.