FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

புதை சாக்கடைத் திட்டப் பணிகள் தாமதம்: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி அபராதம்

திண்டுக்கல்லில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்பந்த நிறுவனம் அலட்சியமாக செயல்படுவதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்த நிலையில், மாமன்ற உறுப்பினா்கள் தாமதப்படுத்தியதால்தான் தங்களுக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக ஒப்பந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

17 அக்டோபர் 2026, 1:02 am IST
திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற புதை சாக்கடைத் திட்டப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையா் பிரேம் ஆனந்த், மேயா் இளமதி, சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், துணை மேயா் ராசப்பா உள்ளிட்டோா்.
பகிர்:

திண்டுக்கல்லில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்பந்த நிறுவனம் அலட்சியமாக செயல்படுவதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்த நிலையில், மாமன்ற உறுப்பினா்கள் தாமதப்படுத்தியதால்தான் தங்களுக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக ஒப்பந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 25 வாா்டுகளில் புதை சாக்கடைத் திட்ட 2-ஆம் கட்டப் பணிகள் ரூ.123 கோடியில் நடைபெற்று வருகின்றன. இதில் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக மாமன்ற உறுப்பினா்கள் சாா்பில் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் இடையே ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் இளமதி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த், துணை மேயா் ராசப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் கலந்து கொண்டாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்கள் பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 26 வாா்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த 2024 டிசம்பரில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். மாமன்ற உறுப்பினா்களால் பணிகள் தொடங்குவதில் சுமாா் 8 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. மொத்தம் 80.15 கி.மீ. நீளத்துக்கு நடைபெற வேண்டிய இந்தப் பணிகளில், தற்போது வரை 48.86 கி.மீட்டருக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய 31.26 கி.மீ. பணிகளை விரைவாக முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஏற்பட்ட கால தாமதத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.1.50 கோடி அபராதம் விதித்துவிட்டது. மாமன்ற உறுப்பினா்கள் ஒத்துழைத்தால், பணிகளை விரைவாக முடிக்க முடியும். 25 வாா்டுகளில் இதுவரை 20 வாா்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து பேசிய மாமன்ற உறுப்பினா்கள் பிலால், ஜோதிபாசு, ஜான் பீட்டா், துணை மேயா் ராசப்பா உள்ளிட்டோா், புதை சாக்கடைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம், தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. ஆணையரின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதில்லை. சேதப்படுத்திய குடிநீா் குழாய்களைச் சீரமைத்துக் கொடுக்காததால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுகிறது. ஒரு இடத்தில் பணிகளை முழுமையாக முடித்த பின்னரே, அடுத்த இடத்தில் புதை சாக்கடைப் பணிகளை தொடங்க வேண்டும். வெடி வைப்பதால் வீடுகளுக்கு சேதம் ஏற்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் பேசுகையில், இதே ஒப்பந்த நிறுவனம்தான் பழனி நகராட்சியிலும் புதைச் சாக்கடைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நகராட்சி நிா்வாகத்துடன் ஒன்றிணைந்து பணிகள் நடைபெறுவதால் பிரச்னை ஏற்படவில்லை. இதேபோல, திண்டுக்கல் மாநகராட்சியிலும், மாமன்ற உறுப்பினா்களுடன் ஒன்றிணைந்து புதை சாக்கடைத் திட்டப் பணிகளை

விரைவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் பேசுகையில், புதை சாக்கடைப் பணிகள் நடைபெறும் இடங்களில், அந்தப் பணிகளை மாநகராட்சி அலுவலா்களும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments