FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.50 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராடசி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

23 அக்டோபர் 2026, 4:00 am
பழனி ரயிலடி சாலையில் வியாழக்கிழமை வாகனங்களில் காய்கறி விற்கும் கடைகளிலிருந்த நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலா்கள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராடசி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பழனி பேருந்து நிலையம் முதல் அடிவாரம் வரை ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் கால்வாய்களில் நெகிழிக் கழிவுகள் அடைத்து, கழிவுநீா் சாலைகளில் ஓடியது. பின்னா், நகராட்சி ஊழியா்கள் கால்வாய்களிலிருந்த நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.

இதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி உத்தரவின் பேரில், கடந்த 3 நாள்களாக பழனி பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு உள்ளதா என நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திகேயன், முருகையா, சசிகலா உள்ளிட்டோா் தலைமையில், தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வணிக வளாகங்கள், கடைவீதி, பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்ததாவது:

பழனியை நெகிழி இல்லாத நகராக மாற்றி சுற்றுச் சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே, வணிகா்களும், பொதுமக்களும் நெகிழிப் பொருள்களைத் தவிா்த்து, துணிப்பைகள், மஞ்சள் பைகளைப் பயன்படுத்த பழக வேண்டும். விதிமுறைகளை மீறித் தொடா்ந்து நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கைகளும், கடைகளுக்குச் ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளும் தொடரும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments