FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மழைநீரை சேமிக்க அமைக்கப்பட்ட தல்லாகுளம் பெருமாள் கோயில் குளம் வறண்டது: பராமரிப்பின்றி சிதிலமடைவதால் பொதுமக்கள் வேதனை

மதுரையில் மழை நீர் சேமிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பம் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்தும்,

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மதுரையில் மழை நீர் சேமிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பம் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்தும், நீர் வழிகள் அடைக்கப்பட்டதால் வறண்டும் காணப்படுவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அழகர்மலையில் உள்ள கள்ளழகர் கோயிலின் உப கோயிலான இங்குதான், சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்க புறப்பாடாவது வழக்கம். இக்கோயிலின் வலது புறத்தில் கோகலே சாலைக்கும், அழகர் கோவில் சாலைக்கும் இடையே தெப்பக்குளம் உள்ளது. திருமுக்குளம் என அழைக்கப்படும் இங்கு தெப்பத்திருவிழாவின் போது சுவாமி எழுந்தருள்வார்.
இங்குள்ள தெப்பத்தில் தண்ணீரை நிரந்தரமாகத் தேக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்புப் பணிகள் நடந்தன. அதன்படி குலமங்கலம் பகுதியிலிருந்து தெப்பத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் சீரமைக்கப்பட்டது. 
இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தல்லாகுளம் பகுதியில் மட்டும் நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாத நிலை இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த 2017 அக்டோபர் 3 ஆம் தேதி தெப்ப நீரில் சுவாமி எழுந்தருளி தெப்போற்சவமும் நடைபெற்றது. 
போதிய பராமரிப்பில்லை: தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியில் பெய்யும் மழை நீரும் தெப்பத்தில் சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டன. மேலும், தெப்பத்தின் உள்புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல டைல்ஸ் வசதி, உட்காருவதற்கான  வசதிகள் மட்டுமின்றி, குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு சாதனம் என  சிறு பூங்காவும் அமைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தெப்பம் சீரமைப்பில் கோயில் அலுவலர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால், அவை அனைத்தும் தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன. புதர்கள் மண்டிய நிலையில், தெப்பத்தின் உள்புறம் குப்பைகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது.  
தெப்பத்துக்கு தண்ணீர் வரும் பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில், அதைச் சீரமைக்க கோயில் நிர்வாகமும், மாநகராட்சி தரப்பும் முன்வரவில்லை. இதனால் கோயில் தெப்பம் ஆண்டு முழுவதும் வறண்டு காணப்படுகிறது.
கழிவு நீர் கலக்கிறது: இதுதவிர தெப்பத்தை சுற்றிய கடைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரும் தெப்பத்துக்குள்ளே தொடர்ந்து செல்கிறது. 
பெருமாள் கோயிலின் முன்பகுதி தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாகி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் மழை நீர் சேமிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தெப்பக்குளமும் சிதிலமடைந்தும், கழிவு நீர் தேங்கியும் வருவது அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 
மதுரையை பிளாஸ்டிக் இல்லாத நகராகவும், பொலிவுறு நகராகவும் மாற்ற பல கோடி நிதி செலவிடும் நிலையில், ஏற்கெனவே மழை நீர் சேகரிப்புக்கும், நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும் ஏற்ற வகையில் இருந்த பெருமாள் தெப்பக்குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை. 

தண்ணீர் பாதையை கண்டறிய பொறியியல் கல்லூரி உதவி
தெப்பக்குளத்தின் பரிதாப நிலை குறித்து  கோயில் நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, தெப்பத்திற்கு நீர் வரும் பாதை அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கவில்லை என்றும்,  தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் தெப்பத்தின் நீர் வழியைச் சீரமைக்கவும், உள்புறத்தில் சிதிலமடைந்த பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். 
கோயிலுக்குச் சொந்தமான  கடைகள், வாகனம் நிறுத்த வசூலிக்கும் கட்டணம்  போன்றவற்றின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும் நிலையில், தெப்பத்திருவிழா மற்றும்  நிலத்தடி நீரின் அடித்தளமாக விளங்கும் தெப்பத்தை பராமரிக்க தனியார் உதவிக்காக கோயில் நிர்வாகம் காத்திருப்பதாகக் கூறுவது நியாயமா? என்பதே பொதுமக்கள் கேள்வியாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments