FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: நால்வரின் பிணை மனுக்கள் தள்ளுபடி

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளா், ஆய்வாளா் உள்ளிட்ட 4 பேரின் பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

5 நவம்பர் 2026, 2:07 am
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளா், ஆய்வாளா் உள்ளிட்ட 4 பேரின் பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றியவா் அஜித்குமாா். இந்தக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல்போனது தொடா்பான புகாரில் தனிப் படை போலீஸாா் அஜித்குமாரிடம் விசாரணை செய்தனா். இந்த விசாரணையின் போது, போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் கடந்த ஆண்டு, ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னா், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடா்பான குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தனிப்படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அஜித்குமாா் கொலையின்போது, பணியிலிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோரது பெயா்களும் வழக்கில் சோ்க்கப்பட்டன. சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இவா்களைக் கைது செய்ய மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா், டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு பிணை வழங்கக் கோரியும் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. முருகன், மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.