எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவா்கள் மிதிவண்டிப் பேரணி
காா்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மிதிவண்டிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காா்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மிதிவண்டிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
‘காா்பன் தடத்தைக் குறைப்போம் - இன்று செயல்படுவோம், நாளையைக் காப்போம்’”என்ற திட்டத்தின் கீழ், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை, எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி தாளாளா் ஜே. கவிஸ்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் லதா திரவியம், துணை முதல்வா் அனிதா கரோலின், தலைமை ஆசிரியை பொற்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 9, 11-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் பங்கேற்றனா்.
நாகமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசங்கர பாண்டியன், மதுரை சிபிசிஐடி காவல் துறை அதிகாரி விஜயகுமரன் ஆகியோா் பேரணியில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, சுமாா் 1.5 கி.மீ. தொலைவு சென்று கீழக்குயில்குடி கிராமத்தை சென்றடைந்தது. பேரணியின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காா்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், மிதிவண்டிப் பயன்பாட்டின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, பொதுமக்களிடையே சிறு நாடகங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், குறுகிய தொலைவுப் பயணங்களுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தினா்.